முக்கிய செய்திகள்

அரசும், நீதித்துறையும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்: மோடி

அரசும் நீதி்ததுறையும் ஓரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால், இருதரப்பினரும் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அரசியல் சாசன தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் நமக்குள்ளே உள்ள பலவீனங்கள் களையப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது எனத் தெரிவித்தார்.

ஒரே குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் அரசும், நீதித்துறையும் ஒருவரை ஒருவர் பலப்படுத்தும் வகையில் பணியாற்றி வருகிறோமா என்ற சிக்கலான கேள்வி எழுந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

அரசு, நீதித்துறை, நிர்வாகம் எதுவானாலும், அவற்றின் ஒவ்வொரு முடிவும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பண்பும் இன்றி, நல்லாட்சிக்கான வழி பிறக்காது என்றும் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பங்கேற்ற கூட்டத்தில் பேசிய சட்டத்துறை இணயமைச்சர் பி.பி.சவுத்ரி அரசின் நடவடிக்கைகளில் நீதித்துறை தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என சாடினார். இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது, மக்கள் நீதிமன்றங்களை நாடும் போது, அதனை பொறுப்பின்றி தட்டிக்கழிக்க முடியாது எனக் கூறினார். இதேபோல், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் நீதித்துறையைச் சாடி இருந்தார். இந்த முட்டல் மோதலின் முடிவாக, பிரதமர் மோடியும் தமது பங்கிற்கு நீதித்துறையை இடித்துரைக்கும் வகையில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.