அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுவரை பேச முன்வராத முதலமைச்சர் இனியாவது பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களான ஜேக்டோ-ஜியோ கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜேக்டோ-ஜியோ சங்கத்தினர் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும்; சத்துணவு மையங்கள், அரசுப்பள்ளிகளை மூடுவது – இணைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; அரசு அலுவலகங்களில் – பள்ளிகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்யாமல் அவுட்சோர்சிங் மூலம் வெட்டிச்சுருக்க வகை செய்யும் அரசாணைகளை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நியாயமான கோரிக்கைகள் கடந்த 2 வருடங்களாக பலகட்ட போராட்டங்கள் மூலம் முன்வைக்கப்பட்டும், அரசு பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காண முன்வரவில்லை.
இதுகுறித்து ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்செண்ட் பால்ராஜ் கூறியதாவது, வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் +2 மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடைபெறவுள்ளன என்பதால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், நீதி அரசர்களின் நிபந்தனையை ஏற்றும், அனைத்துக்கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் ஜேக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புவதாக அறிவித்தார். இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசாத தமிழக முதல்வர் உடனடியாக ஜேக்டோ-ஜியோவை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தெரிவித்தார்.