முக்கிய செய்திகள்

ஆண்மை தவறேல்

CHOGM-B-25-4-2013இலங்கையில் இந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் [Commonwealth heads of government (Chogm) ] பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்ககக் கூடாது என்று மூன்றாவதாக ஒரு மத்திய அமைச்சரும் சொல்லி விட்டார்.

முதலில் ஜி.கே. வாசன். இரண்டாவது நாராயணசாமி. மூன்றாவதாக ஜெயந்தி நடராஜன்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிராகத்  தமிழகத்தில் இருந்து எழும் மற்ற குரல்களை எல்லாம் விட, இவர்களது குரல்கள் முக்கியமானவை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, வெளியுறவுத்துறை சார்ந்த முடிவுகளில் மாநில அரசுகளின் தலையீடும், நெருக்கடியும் இருக்கக் கூடாது என்று சிலர் முணுமுணுத்ததைப் பார்க்க முடிந்தது. தற்போது வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் மத்திய அரசின் அங்கமாக இருக்கும் அமைச்சர்களே அதனை வலியுறுத்தும் போது அத்தகைய முணுமுணுப்புகள் இயல்பாகவே அடங்கிப் போவதில் வியப்பில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் தமிழர்கள் மீதான இந்தத் திடீர்ப்பாசத்துக்கு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதே காரணம் எனப் பலரும் கணிக்கலாம். அது உண்மையும் கூட. காரணம் எதுவாக இருந்தால் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ற முறையில் காங்கிரஸ், மத்திய அரசு, பிரதமர் என்ற முப்பெரும் அதிகார மையத்துக்கு எதிராக அவர்கள் எழுப்பியிருக்கும் குரல் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை.

அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் நல்ல முடிவெடுப்பார் என்று உயர்மட்ட  ராஜதந்திர மொழியில் (Diplomatic Language) பேசிவிட்டுச் சென்றார்.

இதற்குமுன் நாராயணசாமி, சுதர்சன நாச்சியப்பன் உட்பட பல அமைச்சர்களும் கூட அப்படித்தான் பேசி வந்தார்கள். சூழலின்

தீவிரம், வறட்டுத்தனமான ராஜதந்திர மொழியைக் கைவிட்டு, எதார்த்த நிலைக்கு ஏற்ப அவர்களைத் தற்போது பேச வைத்திருக்கிறது.

அவ்வளவு ஏன்?

அண்மையில் தனது ஜனதாக் கட்சியைக் கலைத்துவிட்டு பாரதிய ஜனதாவில் ஐக்கியமான சுப்பிரமணியன் சுவாமி கூட, காமன்வெல்த் விவகாரத்தில் பிரதமர் தாமதமின்றி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவுக்குப் பிறகும் பிரதமரின் மௌனத்தைக் கலைக்க அவரைச் சுற்றியுள்ள அதிகார மையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

ஏன் இவ்வளவு தயக்கம் ?

24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசியாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது, அதன் சர்வதேசக் கொள்கைக்கும், தொடர்புக்கும் ஆக்கம் சேர்க்காது  என்று இலங்கை அரசின் குரலையே, இங்குள்ள சிலர்  எதிரொலிப்பதைக் கேட்பதால் எழும் அச்சமா?

அப்படியானால்,  கடந்த 2011ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த அனுமதி கோரி, இலங்கை அரசு விண்ணப்பித்த போது, அதற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனவே!

இதற்கான விண்ணப்பத்தை 2007ம் ஆண்டே இலங்கை அரசு அளித்திருந்தது. மிகச்சரியாக இன அழிப்புக்கான இறுதிப்போர் முடிவடைந்து, லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தருணத்தில், 2009ம் ஆண்டு நவம்பர் 27 முதல் 29 முடிய டிரினாட் அண்ட் டோபாகோவில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாட்டின் போது, இலங்கை அரசின் அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது இறுதிக்கட்டப் போரின் போது, அப்பாவித் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி, இங்கிலாந்துப் பிரதமர் காட்டன் பிரவுன், ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆகியோர் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 2011 காமன்வெல்த் மாநாடு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டது.

அதுமட்டுமல்ல. தற்போது இலங்கையில் நடைபெறும் 2013ம் ஆண்டு காமன் வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாகவும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், கடந்த மாதத் தொடக்கத்திலேயே அறிவித்து விட்டார். காமன்வெல்த் அமைப்புக்கு செய்யப்படும் நிதியுதவியை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

காமன் வெல்த் அமைப்புக்கு நிதியுதவி செய்யும் இரண்டாவது பெரிய நாடு (ஆண்டுக்கு 20 மில்லியன் டாலர்) கனடா என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீது அந்த நாடுகளுக்கு அத்தனை அக்கறை.

அவர்களுக்கெல்லாம் சர்வதேச நாடுகளுடன் எந்தப் பரிவர்த்தனையும் இல்லையா ?

அதுமட்டுமல்ல.

நிறவெறித் திமிருக்காக 1961 முதல் 1994 வரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து தென்னாப்பிரிக்கா நீக்கிவைக்கப்பட்டது, பர்வேஸ் முஷரப் தலைமையிலான ராணுவ ஆட்சிக்காக பாகிஸ்தான் அந்த அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது, ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாமல் தடுமாறும் பிஜி தீவு தற்போதும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிவைக்கப்பட்டிருப்பது…. என மானுட அறத்துக்கு மாறுபட்ட பாதையில் செல்லும் நாடுகள் மீது,  காமன்வெல்த் அமைப்பு தனது கண்டனத்தையும், கண்டிப்பையும் காட்டியதற்கான முன்னுதாரணங்கள் நிறையவே உள்ளன.

காமன்வெல்த் அமைப்புக்கு அத்தகைய அறம்சார்ந்த ஆண்மை இருக்கும் போது, அதன் உறுப்பு நாடான இந்தியாவுக்கு மட்டும் அது இருக்கக் கூடாதா என்ன? இறையாண்மை உள்ள ஒரு நாட்டுக்கு இத்தகைய அரசியல் ஆண்மையும் இருக்க வேண்டும் தானே!

பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதற்காக மனித உரிமை மீறலை ஏற்கும் அளவுக்கு இந்தியா என்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மனச்சாட்சி மரத்துப் போய்விட்டதா என்ன?

தனி மனிதனாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் செய்யக் கூடாத தவறுகளைச் செய்தால் காலமும், வரலாறும் கட்டாயமாக மன்னிக்காது.

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம், இலங்கை அரசின் இனவெறி அடிப்படையிலான மூர்க்கத் தனமான மனித உரிமை மீறலுக்கு எதிரான தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்வதற்கான அரிய வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது.

அதனைச் செய்தால் தமிழர்களின் வரலாற்றில் இந்திய அரசுக்கு ஒரு சிறந்த இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இல்லாவிட்டால்….

மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்த பழிக்கு இந்தியா ஆளாக நேரிடும்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்ற குறள் நெறியின் கோபத்துக்கு இலங்கை ஆளாவது தவிர்க்க முடியாதது. எந்தக் காரணமும் இல்லாமல் இந்தியாவும் ஏன் அந்தக் கோபத்துக்கு இலக்காக வேண்டும்?

மேனா. உலகநாதன்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *