முக்கிய செய்திகள்

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மதுசூதனனே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர் கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட கோகுல இந்திரா உள்ளிட்ட 27 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். இந்நிலையில், வேட்பாளர் குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிமுகவின் ஆட்சிமன்றக்குழு மாற்றியமைக்கப்பட்டது. இதில், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை ) காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆட்சிமன்றக் குழு கூடியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 8 பேர் இதில் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். ஒன்றரை மணி நேர ஆலோசனைக்குப் பின்னர், மதுசூதனனை வேட்பாளராக அறிவித்து பழனிசாமி , பன்னீர்செல்வம் இருவரும் கையெழுத்திடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த ஓபிஎஸ் அணியினர் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்ற போது, அதிமுக அம்மா அணி என்ற பெயரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனன் நிறுத்தப்பட்டார். தற்போது அதிமுகவில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மதுசூதனன் அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் களம் இறங்கி உள்ளார். எனவே இந்த இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

 

Madhu sudhanan Announced as RK nagar Candidate