முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு..


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

மொத்தம் 131 பேர் 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று இறுதி நாள் என்பதால், மேலும் 13 சுயேச்சைகள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுவது உறுதியானது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், இன்று மாலை சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. நமது கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

குக்கர் சின்னம் கிடைத்தது தொடர்பாக தினகரன் கூறுகையில், துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே குக்கர் சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தினகரன் விண்ணப்பித்த தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களையும் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்ட மூன்று சின்னங்களும் அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.