விஷால் விவகாரம்: ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றம்?!

ஆர்.கே .நகர் இடைத்தேர்தலில்  நடிகர் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த விவகாரத்தின் எதிரொலியாக,  சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஷாலை முன்மொழிந்த இருவர் மறுப்புத் தெரிவித்ததாக கூறி, அவரது வேட்புமனுவை  நிராகரிப்பதாக முதலில் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். பின்னர், முன்மொழிந்தவர் மிரட்டப்பட்டதற்கான ஆதாரமாக, விஷால் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். இதனையடுத்து, விஷாலின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில், இரவு 11 மணி அளவில், விஷால் அளித்த வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறி,  அவரது வேட்புமனுவை நிராகரித்ததாக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அறிவித்துள்ளார்.

விஷால் விவகாரத்தில் நிகழ்ந்த இந்தக் குளறுபடிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையரிடம் முறையிடப் போவதாக  விஷால் தெரிவித்தார்.  இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற தேர்தல் ஆணையத் தமிழகத் தலைமை அதிகாரி லக்கானி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட  பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால், இனியும் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.