முக்கிய செய்திகள்

ஆர்.கே. நகர்: பரப்புரையை விட பாதுகாப்பும், ரோந்தும் தீவிரம்!

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில், போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மற்றும் போலீஸார் இணைந்து செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆர்.கே.நகர் தொகுதியில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், புது வண்ணாரப்பேட்டை, காசிமேடு, மீன்பிடி துறைமுக போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையுடன் இணைந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், இதுவரை கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

போலீஸார் கண்காணிப்பு பணியில் சரியாக ஈடுபடுகின்றனரா அல்லது பணி செய்யாமல் இருக்கிறார்களா என்பதை கண்டறிய கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம், இணை ஆணையர் ஆர்.சுதாகர் ஆகியோருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நள்ளிரவில் நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.

தேர்தல் முறைகேடு, பணப் பட்டுவாடா தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் தனித்தனியாக அறிவித்துள்ளனர். தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோக பாதுகாப்பு பணிகள், பிரச்சாரம், பண விநியோகம், அத்துமீறல், அதன் மீதான நடவடிக்கைகள் என அனைத்து அரசியல் நகர்வுகளையும் மத்திய உளவுப்பிரிவு போலீஸார் கண்காணித்து உடனுக்குடன் தகவல்களை தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் மாநில உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் தேர்தல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இடைத் தேர்தலை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை இல்லாமல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் ஆர்.கே. நகர் தொகுதிக்குள் வரக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

மேலும் வேட்பாளர்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டிக் கொண்டு பொது மக்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுரை வழங்கி இருந்தது. இந்த நடைமுறை மீறப்படுகிறதா என்பதையும் பறக்கும் படை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்களின் செலவு கணக்குகளும் கணக்கிடப்பட்டு வருகின்றன. இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,500 உள்ளூர் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் அதிவிரைப்படை போலீஸாரும் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து 15 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஆர்.கே.நகருக்கு விரைவில் சென்னை வருவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தேவைப்பட்டால் மேலும் துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முதல் கட்டமாக மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் 272 பேர் சனிக்கிழமை ரயில் மூலம் சென்னை வந்தனர். இவர்கள் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சென்னை போலீஸாருடன் இணைந்து துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்கு வந்து துணை ராணுவத்தினர் புதுவண்ணாரப்பேட்டை, எல்ஐசி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பிரிவினர் புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் தங்கியுள்ளனர். தற்போது பாதுகாப்பு, வாகன சோதனை, ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் துணை ராணுவப்படையின் கொடி அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது.

தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுபோக அரசியல் கட்சியினர் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு புகார்கள் எழுந்தால் இதில் பதிவாகும் காட்சிகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

வெளியூரில் இருந்து வாக்குச் சேகரிக்க வரும் பிரபலங்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களுக்கு துணை ஆணையர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. போலீஸார் ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் புதிய அலுவலராக பிரவீன் பி.நாயர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் தேர்தல் நடத்தும் அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குநர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டார். இத்தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார். அப்போது விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றி புதிய அலுவலராக பிரவீன் பி.நாயரை நியமிக்குமாறு மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் புதிய அலுவலராக பிரவீன் பி.நாயரை நியமித்து உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரவீன் பி.நாயர் நேற்று தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு வந்து முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.