முக்கிய செய்திகள்

இந்தியாவில் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு: லான்செட்’மருத்துவ இதழில் தகவல்..

‘இந்திய மக்களின் சராசரி வாழ்நாள் காலம் கூடியுள்ளது. நாட்டிலேயே மிகவும் ஆரோக்கியமான மாநிலம் கேரளாதான்’’ என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்), இந்திய பொது சுகாதார சம்மேளனம் (பிஎச்எப்ஐ) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்ரிக்ஸ் அண்ட் எவாலுவேஷன் (ஐஎச்எம்இ) ஆகியவை சமீபத்தில் நாடு முழுவதும் மக்களின் ஆரோக்கியம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கை ‘லான்செட்’ மருத்துவ இதழில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 1990-ம் ஆண்டில் மனித சராசரி வாழ்நாள் பெண்களுக்கு 59.7 ஆண்டுகள், ஆண்களுக்கு 58.3 ஆண்டுகளாகவும் இருந்தன. கடந்த 2016-ம் ஆண்டு ஆய்வுப்படி பெண்களின் வாழ்நாள் காலம் 70.3 ஆண்டுகளாகவும், ஆண்களின் வாழ்நாள் காலம் 66.9 ஆண்டுகளாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் மிக ஆரோக்கியமான மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு ஆண்களின் வாழ்நாள் காலம் 73.8 ஆண்டுகளாக உள்ளது. பெண்களின் வாழ்நாள் காலம் 78.7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இது தேசிய சராசரி வாழ்நாள் காலத்தை விட 8 ஆண்டுகள் அதிகம்.
உத்தரபிரதேச மாநில பெண்களின் வாழ்நாள் காலம், தேசிய சராசரியை விட (70.3) மிகவும் குறைவாக உள்ளது. கேரள பெண்களை விட உ.பி. பெண்களின் வாழ்நாள் காலம் 12 ஆண்டுகள் குறைவாக உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளது. எனினும் சீனா, இலங்கை வாழ் மக்களை விட 11 ஆண்டுகள் குறைவுதான் என்று கூறுகின்றனர். அசாம், உ.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்தான் நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். கேரளா, கோவாவில் நோய் பாதிப்பு குறைவு. பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
. உ.பி. போன்ற வட மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால் தற்போது சுகாதார நிலைமை மேம்பட்டுள்ளது. எனினும், இது போதாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.