முக்கிய செய்திகள்

இளம் விஞ்ஞானி விருது வென்ற பழங்குடி மாணவருக்கு ஸ்டாலின் வாழ்த்து..

‘இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ள தமிழக மாணவர் எம்.சின்னகண்ணனுக்கு கழக செயல் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்’

“மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில், ஈரோடு மாணவர் திரு. எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவனுக்கு “இளம் விஞ்ஞானி” விருதும், பரிசும் வழங்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர் சின்னகண்ணனுக்கு எனது பாராட்டையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வுக் கட்டுரை, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெறவிருக்கும் இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வரும் எம்.சின்னகண்ணன் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை, தமிழக மாணவ – மாணவியருக்கு மிகுந்த உற்சாகமும், உந்துசக்தியும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.