முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவுடன் விளையாட வேண்டாம்: சிபிஐக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடும் சி.பி.ஐ அதிகாரிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் காட்டமாக கூறி கண்டித்துள்ளனர்.

பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதேபோல, பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சிபிஐ சேர்த்து விசாரிக்க கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மாவை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து உரிய விளக்கத்தை பிற்பகலில் தெரிவிக்குமாறு சிபிஐ வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள் ஏ.கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதை மிகவும் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்த நீதிபதிகள், ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 சிபிஐ அதிகாரிகள் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.