முக்கிய செய்திகள்

என் கணவர் நிரபராதி: தங்கல் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மனைவி புலம்பல்!

விமானத்தில் தமது கணவர் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று சம்பவம்  தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள நபரது மனைவி தெரிவித்துள்ளார்.

தங்கல் படத்தில் நடித்த 17 வயதே ஆன இளம் நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட நடிகையே இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டார். 

இதன் அடிப்படையில், தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஏர் விஸ்டாரா நிறுவனம் அளித்த தகவலை வைத்து 39 வயதான விகாஸ் சச்தேவ் என்ற தொழிலதிபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை 18 வயது பூர்த்தியாகதவர் என்பதால் கைது செய்யப்பட்டவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விகாஸ் சச்தேவின் மனைவி, தமது கணவர் நிரபராதி என்று கூறியுள்ளார்.  தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் வயதுடைய நபரது இறப்புக்குச் சென்று  திரும்பியதால், 24 மணி நேரமாக தூங்காமல் இருந்ததாகவும், அதனால் தம்மை தொல்லை செய்ய வேண்டாம் என விமான பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிரே இருந்த பெண்ணின் மீது அவர் வேண்டும் என்று கால்களைப் போடவில்லை என்றும் கைது செய்யப்பட்டவரின் மனைவி கூறியுள்ளார்.