முக்கிய செய்திகள்

ஏமனில் குழந்தைகள் சென்ற பேருந்து மீது குண்டு வீச்சு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..


ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.