
ராஷ்ட்ரிய லோக் தள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் கரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 82.
ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் மேற்கு உத்தரப் பிரதேச முக்கியத் தலைவரான அஜித் சிங் நுரையீரல் கிருமி தீவிரம் காரணமாக உடல் நிலை மோசமடைய செவ்வாய் இரவு குருகிராம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏப்ரல் 20ம் தேதியன்று கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் வியாழன் காலை உயிரிழந்தார். இது தொடர்பாக இவரது மகன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “சவுதாரி அஜித் சிங் ஏப்ரல் 20ம் தேதியன்று கொரோனா பாசிட்டிவ் என்று கணிக்கப்பட்டார். கடும் போராட்டத்துக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்றி அவர் வியாழன் காலை நம்மை விட்டுப் பிரிந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது மரணத்திற்கு சமூக ஊடகங்களில் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் இரங்கல் குறிப்பில், அஜித் சிங்ஜி ஏழை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன்களுக்காகப் போராடியவர் என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறும்போது, “அஜித் சிங்கின் அகால மரணம் எனக்கு துயரத்தை அளிக்கிறது, அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் மகனான அஜித் சிங் பாக்பத் தொகுதியிலிருந்து 7 முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர். சிவில் ஏவியேஷன் துறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
15 ஆண்டுகாலம் கணினித்துறையில் அமெரிக்காவில் இருந்த அஜித் சிங் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தன் அரசியல் வாழ்க்கைக்காக இந்தியா திரும்பினார்.
காரக்பூர் ஐஐடி மற்றும் இல்லினாய்ஸ், சிகாகோ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்தவர் அஜித் சிங். 1986ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்ய சபாவுக்காக தேர்வு செய்யப்பட்டார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினர் மத்தியில் அஜித் சிங்குக்கு பெரிய செல்வாக்கு இருந்தது.
வெற்றி பெறுவதற்காக கூட்டணியை மாற்றிக் கொண்டேயிருப்பவர் என்றும், சந்தர்பவாதி என்றும் இவரது விமர்ச்கர்கள் கூறுவதுண்டு. வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அஜித் சிங் தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது உணவு அமைச்சராக இருந்தார் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து 1996ம் ஆண்டு விலகினார்.
அதன் பிறகு ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை ஆரம்பித்து 2001-ல் வாஜ்பாயி பிரதமராக இருந்த போது வேளாண் அமைச்சராக பதவி பெற்றார். மே 2003 வரை தேஜகூ-வில் இருந்தார்.