காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்தின் முதல்வராக்க பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட சில போஸ்டர்களில் அகமது படேலை முதல்வராக்க வாக்களியுங்கள் என இடம்பெற்றிருந்தது. இதனை குறிப்பிட்டு பனஸ்கந்தாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் குஜராத்தை இழிவுபடுத்தினார். அவர் பாகிஸ்தான் தூதருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதற்கு என்னதான் காரணம்? பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் அகமது படேல், குஜராத் முதல்வராக வேண்டும் என எழுதுவது எதற்காக? இவ்வாறு பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
இதனிடையே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் குற்றச்சாட்டை அகமது படேல் நிராகரித்துள்ளார். மேலும், நான் எப்போதுமே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. பாஜகவினர் தோல்வி பயத்தில் உளறுகிறார்கள் என்றார்