முக்கிய செய்திகள்

குமரி மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும்: அமைச்சர் தங்கமணி!

குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர் .பி. உதயகுமாரும், அமைச்சர் தங்கமணியும் நிவாரணப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் இன்றுடன் (சனி) வடிந்துவிடும். அதிக நீர் தேங்கியுள்ள பகுதியில் அதனை வடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐநூறு மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பழுதான துணை மின்நிலையங்களில் 5  பழுதுநீக்கப்பட்டுவிட்டது. நிறைய இடங்களில் மின்கம்பிகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதால் அவற்றை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால், மின் விநியோகம் முழுமையாக சீரடைய மூன்று நாட்கள் (திங்கள்) ஆகும். கடலுக்குள் 29 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் 18 படகுகளில் சென்றவர்கள் திரும்பி வந்துவிட்டனர். மீதமுள்ள 11 படகுகள் திரும்பவில்லை. இதில் 101 மீனவர்கள் இருக்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பவில்லை எனக் கூறப்படுவது தவறான தகவல். 15 முகாம்களில் 1500 பேர் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள நீர் வடிந்த பின்னரே சேதம் குறித்து மதிப்பிட முடியும். வாழைகள், ரப்பர் மரங்கள் அனைத்தும் சாய்ந்துள்ளதால் அவை மதிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவி்ததார்.