முக்கிய செய்திகள்

குவியும் பணப் பட்டுவாடா புகார்கள்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்தாகும் அபாயம்..


சென்னை ஆர்.கே.நகர் பிரச்சாரக் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதன் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. புகார்கள் வரப்பெற்றால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு ஓட்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் புகார் மனு அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு எழும்பூரில் உள்ள ஒரு வீட்டில் பணப் பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்தது.

பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தினகரன் ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், டிடிவி தினகரன் அணி மற்றும் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும், இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற புகார்களால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளனர். இன்று இரவு எழில் நகர், சுண்ணாம்பு காளவாய் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை, பறக்கும் படை, போலீஸ் மற்றும் துணை ராணுவம் சோதனை என நாலாபுறமும் சுழன்று சுழன்று பணியாற்றியபோதும், பணம் கொடுப்பதை முழுமையாக தடுக்க முடியாத நிலைதான் உள்ளது.

கடந்த முறையும் இதேபோன்ற நிலை இருந்தது. கடைசி நேரத்தில் பணம் கொடுத்தது வெட்டவெளிச்சமானதையடுத்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. எனவே, தற்போதைய சூழ்நிலை நீடிக்கும் பட்சத்தில் தேர்தலை ரத்து செய்யும் முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கலாம்.