முக்கிய செய்திகள்

கொள்ளுபேரன் திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி..

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த வீடியோ திமுக சார்பில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க உள்ளது. கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி நடக்கும் இவர்களின் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஓராண்டிற்கு பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் திருமண விழா இதுவாகும்.