முக்கிய செய்திகள்

சேலம் வந்தடைந்தார் ஹாதியா!

லவ் ஜிஹாத் விவகாரத்தில் சிக்கிய கேரள இளம் பெண் ஹாதியா சேலத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். இஸ்லாமிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா, தம்மை பெற்றோரிடமிருந்து விடுவித்து, சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தங்கிப்படிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் படி பலத்த பாதுகாப்புடன் கேரளாவில் இருந்து ஹாதியா சேலத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஹோமியோபதி கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிப்பதற்கான மனுவை கல்லூரி முதல்வரிடம் அவர் அளித்தார். ஹாதியா மீண்டும் படிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்  என கல்லூரி முதல்வர் கண்ணன் தெரிவி்த்தார். பின்னர், கல்லூரி மாணவியர் தங்கி உள்ள விடுதிக்கு ஹாதியா அழைத்துச் செல்லப்பட்டார். சேலம் கல்லூரியில் ஹாதியா வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஹாதியாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.