முக்கிய செய்திகள்

சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!: அஜீஸ் லுத்ஃபுல்லா

அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை.

இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி.

சோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று குரல் கொடுத்ததோடு அவர் ஒய்ந்துவிடவில்லை.

விமான நிலையத்தில் பத்து பாஜககாரர்களைப் பார்த்த தெம்பில் தமிழிசை ருத்ர தாண்டவம் ஆடிய போதும், ‘அவளுடைய பேக் கிரவுண்டு என்ன’ என்று ஓங்காரமிட்ட போதும், ‘அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை, மன்னித்து விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சிய பெண் போலீசைப் பார்த்து, ‘அறிவெல்லாம் இருக்கு, அதனால்தான் ஷீ இஸ் ஷவுட்டிங்’ எனக் கொக்கரித்த போதும்,

‘ஒரு நிமிடம்! ஒரு ஸ்டேட் லீடர் என்று கூடப் பாராமல் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழியட்டும் என்று கத்தினால் சும்மா விடுவேனா, என்ன’ என மிரட்டிய போதும் சோஃபியா சற்றும் மனம் தளரவும் இல்லை. உடைந்து நொறுங்கவும் இல்லை. பீதியடையவும் இல்லை. ‘மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கண்ணியத்தோடும் உறுதியோடும் மறுத்தார் சோஃபியா.

இந்த நாட்டு மக்கள் அனைவருமே பாஜகவுக்கு எதிரான கொந்தளிப்பான மனநிலையில்தான் இருக்கின்றார்கள். சந்தர்ப்பமும் வசதியும் வாய்க்கின்ற போது பாஜகவுக்கு எதிராக கோஷம் போடுவார்கள் என்பதுதான் இந்த நிகழ்வு தருகின்ற முதல் செய்தி.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை போதும் என்பதைப் போன்று ஒட்டுமொத்த இந்தியாவின் நாடித் துடிப்பாக இருக்கின்றார் சோஃபியா. இதனைத்தான் சமூக வலைத்தளங்களில் கேரளத்துப் பெருவெள்ளமாய் திரும்பும் திசையெங்கும் நிறைந்திருக்கும் ‘பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிரான முழக்கங்கள் சான்றளிக்கின்றன.

செய்தியைக் கேள்விப்பட்டதும் துடித்துப் போய், ‘நானும் சொல்றேன். பாஜகவின் பாசிச ஆட்சி’ என ட்விட் செய்தார் மு. க. ஸ்டாலின். இது பாஜகவுக்கு எதிரான முகாமில் அவரை நங்கூரமிட்டு அமரச் செய்கின்ற ட்விட்டாக மிளிர்கின்றது. பாஜகவுக்கு எதிரான அரசியல் அணி வலு பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இது இந்த நிகழ்வு தருகின்ற இரண்டாம் செய்தி.

சோஃபியா எழுப்பிய முழக்கங்களைக் கேட்டதும் பாஜக தலைவர் தமிழிசை தாம்தூம், தூம்தாம் என வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்ததும் மிகையாக எதிர்வினையாற்றியதும் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கின்றது.

எளிதில் பதற்றமடையக் கூடிய, கோபமும் வன்மமும் நிறைந்த, ஆணவமும் அகம்பாவமும் கொண்ட ஆளுமையாக அவர் பார்க்கப்படுவதற்கு இந்த நிகழ்வு மற்றுமோர் சான்றாக ஆயிற்று.

சற்றே மென்மையாக நடந்துகொண்டிருப்பாரேயானால் மாணவியின் உள்ளத்தைக் கவர்ந்திருப்பார். பாஜகவைப் பற்றிய நல்ல இமேஜ் உருவாகியிருக்கும். ஆனால், பாஜகவில் மென்மையும் கண்ணியமும் நிதானமும் எதிர்பார்க்கவே முடியாதே, என்கிறீர்களா?

விடுங்கள். தொலையட்டும்!

AZEEZ LUTHFULLAH – வலைத்தளப்பகிர்வில் இருந்து…