முக்கிய செய்திகள்

சோடா பாட்டில் வீசத் தயார் என்பதா…: ஜீயரா ரவுடியா எனக் குவியும் கண்டனங்கள்

ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில், தங்களுக்கு சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் தெரியும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜன் ஆவேசத்துடன் கூறினார். ஜீயரின் இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜீயரின் இந்தப் பேச்சு பொறுப்பற்றது என்றும், யாராக இருந்தாலும் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர்கள் இதுபோல பேசக் கூடாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜீயரின் இந்தப் பேச்சு குறித்து ட்விட்டரில் விமர்சித்திருக்கும் திராவிய இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன்,  “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ” என்கிறார் சடகோப ராமானுஜ . ரெளடிகளுக்கு மட்டும்தான் இவையெல்லாம் தெரியும் என்று நான் இதுவரை தவறாக எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது ஜீயர்களும் தயார். சபாஷ், சரியான போட்டி !”   என்று குறிப்பிட்டுள்ளார்.