முக்கிய செய்திகள்

டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுகதான் காரணம் என்று கூறுவது தோற்றவர்களின் புலம்பல் : விஜயகாந்த்

டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுகதான் காரணம் என்று கூறுவது தோற்றவர்களின் புலம்பல் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கு உணவு மற்றும் கேக் உள்ளிட்டவற்றையும் அவர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்திடம், டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுகதான் காரணம் என்று கூறப்படுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது தோற்றவர்களின் வழக்கமான புலம்பல் என்று விஜயகாந்த் பதில் அளித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் வெற்றிடம் நிரம்பியதாக தான் கருதவில்லை என்று தெரிவித்த அவர், அதனை பொதுத் தேர்தல் தான் முடிவு செய்யும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.