முக்கிய செய்திகள்

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு முதலமைச்சர் ஆவதற்கு சச்சின் பைலட், அசோக் கெலாட் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ராஜஸ்தானைப் பொறுத்தவரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதர கட்சிகள் 21 இடங்களில் வென்றுள்ளன.

ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவைப்படும்  நிலையில், மாயாவதியின் பகுசன் சமாஜ் ஆதரவை காங்கிரஸ் கோரும் எனத் தெரிகிறது.

இதனிடையே, காங்கிரசின் முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், கெலாட், சச்சின் பைலட் இருவரும் இன்று   காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர்.

இதனிடையே, முதலமைச்சராக சச்சின் பைலட்டை நியமிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கப் போவது மூத்த தலைவர் அசோக் கெலாட்டா அல்லது இளைய தலைமுறைத் தலைவர் சச்சின் பைலட்டா என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கையில்தான் இருக்கிறது.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் மூத்த தலைவர் கமல்நாத், இளைய தலைவர் ஜோதிராத்யா சிந்தியா இருவரிடையே முதலமைச்சர் போட்டிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கும், சிந்தியாவுக்கு ஆதரவாக கட்சியின் இளையதலைமுறையினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பும் ராகுல்காந்தியிடமே விடப்பட்டுள்ளது.

இன்றைக்குள் (13.12.18) மூன்று மாநில முதலமைச்சர்கள் குறித்து ராகுல் முடிவெடுத்து விடுவார் என்று தெரிகிறது. 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இடங்கள் இல்லாததால், இரண்டு மாநிலங்களிலுமே சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற வேண்டி உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர்களைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், தேவையற்ற குழப்பங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால், முதலமைச்சர் தேர்வு விவகாரத்தில் ராகுல் உடனடி முடிவை எடுத்து விடுவார் என காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. 

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும், விரைவில் முதலமைச்சர்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.