முக்கிய செய்திகள்

தப்பியது கவுண்டமணியின் மரியாதை!

 


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியானது . ஆனால் கவுண்டமணி இந்தச் செய்தி தவறானது என மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தாம் அரசியல் சார்பற்றவன் என்றும், ஆர்.கே நகரில் யாருக்கு ஆதரவாகவும் தாம் பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கவுண்டமணி தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக கோலோச்சத் தொடங்கி சுமார் அரைநூற்றாண்டு ஆகப்போகிறது. இதுவரை எந்தப் பத்திரிகைக்கும் அவர் பேட்டி அளித்ததில்லை. “நடிகனை நடிகனாக இருக்க விடுங்கப்பா” என்பது அவரது அழுத்தமான பிரகடனம். அது இன்று எந்த நடிகரின் மண்டைக்குள்ளும் ஏறவில்லை என்பது வேறு விவகாரம். எம்.ஜி.ஆரின் ஆதிக்கம் திரையுலகில் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் கவுண்டமணியின் காலம் தொடங்கியது. எம்ஜிஆர் காலத்தில் அவர் இருந்திருந்தாலும் கூட, சுருளிராஜனைப் போலவே முற்றிலும் விலகி இருக்கக் கூடிய மனோபாவம் கொண்டவர் கவுண்டமணி. தமிழ்த்திரையுலகில் கலைவாணருக்குப் பிறகு மிகப்பெரிய ஆய்வுக்குரிய கலை ஆளுமையாக பரிணமித்தவர் கவுண்டமணி.  ஆனால், தமது புகழை பிறர் தவறாக பயன்படுத்த அவர் அனுமதித்ததும் இல்லை. அவரும் அதைச் செய்ததில்லை. “நடிகனுக்கு பேட்டி எதற்கு” என்ற அவரது கேள்வியும், நிலைப்பாடும் அசாதாரணமானது. மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை உள்ளடக்கியதும் கூட. அவரது நிலைப்பாட்டின் தீவிரமும், அரசியல் தீர்க்கமும் இன்றைய விடலைத் தனமான ஊடகங்களும், சமூக ஊடகங்களும் அறியாதவை. இவர்களது மேனா மினுக்கி அறிவுக்கு அது ஒருபோதும் புரியவும் மாட்டாது. நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இதில் ஒரு வரி கூட நீ எழுதக் கூடாது என்ற கவுண்டமணியின் கலாய்த்தல் அறிவுறுத்தலுடன் திரும்பி வந்த பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேருண்டு. இரண்டு சீன்களில் முகம் காட்டிய அனைவரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் அறிவு ஜீவிகளாக வலம் வரும் இந்தக் காலக்கட்டத்தில், அதனை ஓர் இடியடட் பாக்ஸ்ஆக மட்டுமே இன்றுவரை பார்க்கும் கவுண்டமணியின் கலாபூர்கவக் கம்பீரம் இந்தத் தலைமுறை நடிகர்கள் படித்தறிய வேண்டிய மிகப்பெரிய பாடம்.

தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் அவருக்கு இருந்து புகழுக்கு, அவர் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து நாலு காசு சம்பாதித்திருக்க முடியும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அரசியலில் நாலாந்தரப் பேச்சாளன் என்ற அருவருக்கத் தக்க வேடத்தை விட, திரைப்படங்களில் தாம் புனையும் நகைச்சுவைப் பாத்திரங்களே கௌரவம் மிக்கவை என்ற தெளிவு அவருக்கு இருந்தது. அதனால் தான், கட்சி அரசியலில் இருந்து அவர் வெகுதூரம் விலகி இருந்தார். தற்போதும் அதில் உறுதியாக இருப்பது அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஒருவேளை இந்த முடிவில் இருந்து அவர் சறுக்கினால், அவர் குறித்து நாம் கொண்டிருந்த பெருமிதங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும் கவுண்டமணி அப்படிச் செய்து விடமாட்டார் என்றே நம்புகிறோம். 

இன்னொன்று, கவுண்டமணி கட்சி அரசியலில் இருந்து மட்டும்தான் விலகி இருந்தார். சமூகத்திற்கான தேவையை அழுத்தமாக உணர்த்தும் அரசியலில் இருந்து எவர் எப்போதும் விலகி இருந்ததில்லை. நம் காலத்தின் மிகப்பெரிய அரசியல் தீர்க்கம் மிக்க கலைஞன் கவுண்டமணி என்பதில் சந்தேகமே இல்லை!

  • செம்பரிதி