முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை..


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை தவிர்த்துவிட்டு ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கோவை வந்தார். பாரதியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் இன்று பிற்பகல் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் , மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் , மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட 12 முக்கிய அதிகாரிகள் முக்கிய கோப்புகளுடன் கலந்து கொண்டனர். கோவையில் நடைபெற்ற திட்டங்கள் , செயல்படுத்தப்படும் திட்டங்கள் , நடைபெற உள்ள திட்டங்கள் என அனைத்து திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் தமிழக ஆளுநர் கேட்டறிந்தார். முக்கிய கோப்புகளுடன் கலந்து கொண்ட அதிகாரிகள் ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
வழக்கமாக இது போன்ற கூட்டங்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் அழைக்கப்படும் நிலையில் தமிழக ஆளுநர் அதிகாரிகளிடம் நடத்திய கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதே போன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கோவையில் இருந்தாலும் அவரும் இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை . தமிழக ஆளுநர்கள் இதுவரை இது போன்ற கூட்டங்கள நடத்தாத நிலையில் கூட்டத்தில் இன்றைய கூட்டம் எப்படி நடத்தப்படுகின்றது என்பது புரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக ஆளுநரின் இது போன்ற நடவடிக்கையானது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக இருக்கின்றது என அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் அரசு நிர்வாகங்களில் நேரடியாக தலையிடுவதை போல , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அரசு நிர்வாகங்களில் நேரடியாக தலையிடுவதாகவும் , இதன் முதல் நடவடிக்கையாக கோவையில் அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் நேரடியாக ஆலோசனை நடத்தி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.’