
தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியுள்ளார்.
தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள் என்றும், நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பான CII மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து, கனெக்ட் என்ற பெயரில், 2 நாட்கள் கருத்தரங்கை சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடத்துகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும் – தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனமும் – இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய CONNECT 2021 மாநாட்டில், தமிழ்நாடு தரவு மையக் கொள்கை கையேட்டினை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
CONNECT2021 மாநாட்டில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற தொழில்நுட்பதிறன் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுதொகையை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், 24 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்பத்துக்கு அடித்தளமிட்டது திமுக ஆட்சி என்றும், இதனால் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் கவனத்தை தமிழ்நாடு ஈர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி அவர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகம் 16 விழுக்காடு பங்களித்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.