முக்கிய செய்திகள்

தமிழர் வரலாற்றை மூடி மறைக்க முயலும் மோடி: ஸ்டாலின் தாக்கு

 

தமிழர்கள் வரலாற்றை மூடி மறைக்க மோடி அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க கீழடியில் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி பொதுமக்களை சந்திப்பதில் மகிச்சியாக உள்ளது. கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்த வரலாறு திமுகவை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. உலக அளவில் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி கிராம மக்களை சந்தித்த ஒரே கட்சி திமுக தான். ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், என்னிடம் எப்படி ஊராட்சி சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் என ஆச்சரியத்துடன் கேட்டனர். 

தமிழர்களையும், தமிழ்நாட்டு வரலாற்றையும் மூடி மறைக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகுதான் கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்டது. அடுத்தக்கட்ட அகழாய்வுக்கு அனுமதி கொடுப்பதிலும் மத்திய அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டவே நான்கரை ஆண்டுகள் என்றால் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்புகள் எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி அளித்த உறுதிமொழிகள் என்னவாயிற்று?.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி வந்தாரா?. நரேந்திர மோடி இந்திய மக்களுக்கான பிரதமராக செயல்படவில்லை. 

கலைஞர் ஆட்சியில்தான் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்.  நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைக்கும் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பால் ஓராண்டாக 18 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் நல திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.