மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்கிறார்.
மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலையும் சந்திக்க திமுக, காங்கிரஸ், ம.தி.மு.க. , கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐ.ஜே.க. ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
இதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும்,
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும்,
இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக அந்தெந்த கட்சி தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
இதையடுத்து கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.
இதில் காங்கிரஸ் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து சுமூக முடிவு எட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கான 9 தொகுதிகள் எவை, எவை என்பதை அடையாளம் காண்பது குறித்து இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
காங்கிரசிற்கான 9 தொகுதிகள் எவை, எவை என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அழகிரி தெரிவித்தார்.