முக்கிய செய்திகள்

திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி – திருமா சந்திப்பு: அரசியலில் புதிய வியூகமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில், ரஜினிகாந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சந்தித்துள்ளனர்.

ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக திருநாவுக்கரசர் இல்லத்திற்கு ரஜனிகாந்த் சென்ற போது இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்பில் அரசியல் பின்னணி இருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினி அமெரிக்கா சென்றிருந்த போது, திருநாவுக்கரசரும் சென்றிருந்ததாக வெளியான தகவலை அடுத்தே, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வேண்டாத சுமையாக திமுக கருதுவதாக மற்றொரு பக்கம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில், திருநாவுக்கரசர் – ரஜினிகாந்த் – திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதிய அரசியல் வியூகத்தை வகுப்பதற்கான சந்திப்பாக இது இருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.