இந்திய அணி வெற்றி
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். குணதிலகா 13 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சதீரா சமரவிக்ரமா 42 ரன்களிலும், தரங்கா 95 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கியவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர். சஹால் வீசிய 10 ஓவர்களில் 3 மேய்டன் ஓவர்களும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து 216 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். முந்தைய போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதன்பின் தவானுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் – ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. அதன்பின் தவானுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தது. அதிரடியாக விளையாடிய தவான் 84 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 12-வது சதமாகும். இந்திய அணி, ஒவர்களில் ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இது கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்தியா வெல்லும் 8-வது இருநாட்டு தொடராகும். தவான் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்று விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்நாயகன் விருதை ஷிகர் தவான் தட்டிச்சென்றார்.
அடுத்ததாக இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. முதல் டி20 போட்டி, வருகிற 20-ம் தேதி கட்டக்கில் நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-0 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.