முக்கிய செய்திகள்

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு..


ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக பாவனைகளை முஸ்லிம் மதத்துக்கு எதிராக இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமர் உலு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘ஒரு அடர் லவ்’ படமாகும். இந்த படத்தின் நாயகி பிரியா பிரகாஷின் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஒரு சில நாட்களில் இணையத்தில் பெரும்பாலானவர்களை இவரின் பாடல் கவர்ந்து இழுத்தது.

இந்நிலையில், இந்தப் பாடல் படமாக்கிய விதம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தவாகக் கூறி ஐதராபாதில் உள்ள பளாக்னமா போலீஸ் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் வரும் மணிகயா மலரயா பூவே பாடல், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸில் புகார் அளித்த அதான் ஓமர் கூறுகையில், ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் இயக்குநர் ஒரு முஸ்லிம், அவர் அதில் வரும் பாடலான மணிகயா மலரயா பூவே பாடலை நபிகள் நாயகத்துடன் தொடர்பு படுத்தி படமாக்கியுள்ளார். நபிகள் நாயகத்துக்கும் அவரின் மனைவி கதிஜியாவுக்கும் இடையிலான காதலைக் குறிக்கும் வகையில் அந்த பாடல் இருக்கிறது. இது இறைத்தூதரை அவமானப்படுத்தும் பாடலாக அமைந்து இருக்கிறது.

இது தொடர்பாக 57 பேர் கையொப்பமிட்ட புகாரை போலிஸில் அளித்து இருக்கிறோம். பிரியா பிரகாஷ் மீது புகார் கொடுக்கவில்லை. இயக்குநர் மீதுதான் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து பளாக்னுமா மண்டல போலீஸ் துணை ஆணையர் சயீத் பயாஸ் கூறுகையில் “ முஸ்லிம் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், சட்ட ஆலோசனை செய்ததன் அடிப்படையில், ஐபிசி பிரிவு 295 ஏ பிரிவின் கீழ் திரைப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

நாங்கள் முஸ்லிம் மதகுருக்களின் ஆலோசனையை கேட்க இருக்கிறோம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.