பாறை நெடு உருளில்
உதிர்ந்து கிடக்கின்றன
நடைவழி நண்டுகள்.
போதாமையின் தவிப்பில்
கணநேரம் சிலிர்த்தெழுந்து
கீச்சிடுகின்றது மின்னல் கூட்டம்.
தாகம் தணித்து
தடாகத்தைக் கடந்து
உருண்டோடும் பாறை,
இரவின் சலனங்களில் மிதக்கிறது.
நிற்கதியான நிழல்களின்
ரோமச்சுருளில் தாபத்தின்
வெளிர் வெளிச்சம்.
நடைவழி நண்டுகள்
நிமிர்வின் கோடுகளைக் குறுக்கி
மண்ணுள் ஊரத்தொடங்குகின்றன.
கதகதக்கும் மண்ணின் அடுக்குகளில்
கிளர்ந்து; திமிறி; ஒடுங்கி நடக்கின்றன.
காகம் கடக்கும் பாலைச்சூட்டில்
உதிர்ந்துகிடக்கும் நகக்கண் கீறி
நடைவழி நண்டுகள்
குதிகுதித்து ஓடுகின்றன.
புலன்வெறிக்கும் மணற்பொடியில்
மெல்லத் தத்தித்தத்தி
முன்கால் நீண்டு பின்கால் இடறி
சர்ப்பமென படர்ந்து கடக்கின்றன.
நடைவழி நண்டுகளின்
கொடூர கொடுக்குகள்
பாழ்விரல்; சதைத்தடித்தக்கல்
பிழைப்பேழையின் ஸ்வரூபம்