திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்துள்ள சம்பவத்தை பார்க்கும் போது, 1999ம் ஆண்டு தேர்தலின் போது, அதிமுகவில் இருந்து சென்ற கம்பம் செல்வேந்திரனை அவிழ்த்துப் போட்ட கோவணம் என காளிமுத்து விமர்சித்தது தமது நினைவுக்கு வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
தம்பி செந்தில் பாலாஜியை எனக்கு 2006-லிருந்து தெரியும். அப்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வேட்பாளர் தேர்வு குறித்துக் கேட்டார். அப்போது நான் தேர்வு செய்து கொடுத்த பெயரில் செந்தில் பாலாஜி பெயரும் ஒன்று. அதன் பின்னர், அவரை ஜெயலலிதா வேட்பாளராகத் தேர்வு செய்தார். வெற்றி பெற்றார்.
2007-க்குப் பிறகு, தீவிர அரசியலிலிருந்து என்னை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். இப்படிச் சொன்னால் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால்தான் அப்படிச் சொன்னேன். வேற ஒண்ணும் இல்ல. அதன் பின்னர், நான் செந்தில் பாலாஜியைப் பார்க்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
செந்தில் பாலாஜி எங்களுடன் நல்லாதான் இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் என்னிடம் வந்து, எனக்கு சொந்த பிரச்னை கொஞ்சம் இருக்கிறது. அதெல்லாம் முடிச்சிட்டு வர்றேன். அதுவரை கொஞ்சம் கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றார். நானும் விட்டுவிட்டேன். கஜா புயல் நேரத்தில்கூட மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருள்களை அனுப்பி வைத்திருந்தார்.
டிசம்பர் 5, ஜெயலலிதா நினைவு தினத்தின்போதுகூட அவர் வரவில்லை. அப்போதுதான் இது தொடர்பாகக் கேட்டேன். அவர் ஏதோ வழக்கு தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதில் தாமதமானதால் வர முடியாததாகச் சொன்னார்கள். அதன் பின்னர் அவரிடம் பேசவில்லை.
பின்னர் மூன்று தினங்களுக்கு முன் அவர் தி.மு.க-வுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அப்போதும் பேச சொன்னேன். அப்போது பேசியவர்கள், அவர் பேசுவது சரியில்லை என்றார்கள். நானும் விட்டுவிட்டேன். யாரையும் பிடித்து வைக்க முடியாது. ஏதோ சொந்த பிரச்னை என்றார். இப்போ ஒருமாசமா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாகச் சொல்கிறார். ஒண்ணும் பிரச்னை இல்லை. எங்கிருந்தாலும் வாழ்க. எங்ககூட இருக்கிற வரை நன்றாகத்தான் இருந்தார்.
அவர் போனதில் எந்த வருத்தமும் இல்லை. பிடிக்கவில்லை என்றால், போகலாம். அவர் காரணம் சொன்னால், அதற்குப் பதில் சொல்லுவோம். ஆனால், எந்தக் காரணமும் சொல்லவில்லை. எனக்கு என்ன வருத்தன்னா, கரூர் மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒன்றரை லட்சம் படிவங்கள் அவரிடம் இருக்கிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று செய்த உழைப்பு அது. அது இன்னும் கைக்கு வரவில்லை. அது மட்டும்தான் எனக்கு வருத்தம். அதைக் கொடுத்து அனுப்பிட்டாருன்னா எனக்கு மகிழ்ச்சி. அது நிர்வாகிகளின் உழைப்பு.
யாரோ ஒரு சிலர் போவதால், மக்கள் இயக்கம் அழிந்துவிடும் என்று கூறுவது தவறு. அவர் நல்ல தம்பிதான். எங்களுடன் சிறப்பாகப் பணியாற்றினார். அதை எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. செந்தில் பாலாஜியை விடுங்கள். தி.மு.க எங்கள் இயக்கத்திலிருந்து ஒரு நிர்வாகியை இழுத்து, அந்த இணைப்பை விழா போல் கொண்டாடும் நிலையில்தான் அந்தக்கட்சி உள்ளது. தி.மு.க-வின் பலத்துக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. காரணம், ஆர்.கே.நகரில் டெபாசிட் காலி ஆனதில் இருந்து தி.மு.க இது போன்ற முயற்சிகளைச் செய்து வருகிறது. இதில் ஒரு அற்ப சந்தோஷம் அவர்களுக்கு. இருக்கட்டும்.
1999ல் நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் என்னை ஜெயலலிதா வேட்பாளராக அறிவித்திருந்தார். அப்போது, அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ம்த கம்பம் செல்வேந்திரன் எனக்கு எதிராக நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது, தினகரன் பட்டுத்துணி என்றும், தான் பருத்தித் துணி என்றும், பட்டுத்துணி பயன்படுத்த முடியாது என்பதால், பருத்தித் துணியைப் போன்ற எனக்கு வாக்களியுங்கள் என்று கம்பம் செல்வேந்திரன் மக்களிடம் கேட்டார். இதற்கு பதிலளித்து என்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தி பேசிய காளிமுத்து, கம்பம் செல்வேந்திரன் பருத்தித் துணியல்ல, அதிமுக அணிந்து கழற்றிப் போட்ட கோவணத்துணி என்று விமர்சித்தார். செந்தில் பாலாஜியை சேர்த்துக் கொண்ட திமுகவை நினைக்கும் போது அப்போது காளிமுத்து பேசியதுதான் நினைவுக்கு வருகிறது.
மேலும், சர்க்கஸ் கோமாளி மாதிரி பேசுபவர்களுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்குக் களங்கம் ஏற்படுத்தியவர்களுடன் நான் இணைவேனா. தி.மு.க-வில் இணைய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. தி.மு.க எதிர்ப்பு என் ரத்தத்தில் உள்ளது. ஜெயலலிதா மீது வழக்குப் போட்டு, அவர் இறந்த பிறகும் அவரைக் குற்றவாளி எனக் கூறும் திமுகவிடம் செந்தில் பாலாஜி போய்விட்டாரே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.