முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் உ.பியில் நிகழ்ந்ததைப் போல மதுரை அரசு மருத்துவமனையில் துயர சம்பவம்: மின்தடையால் மூவர் பலியானதாக புகார்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்ததைப் போலவே, மதுரை அரசு மருத்துவமனையில் நிர்வாக அலட்சியத்தால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் வினியோகம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் தடைப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது.

ஆனால் அதுவும் திடீர் என பழுது அடைந்தது. இதனால்  மருத்துவமனை வளாகம் நேற்றிரவு இருளில் மூழ்கியது. இதற்கிடையே தலைக்காய சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் கருவிகளும் மின்தடையால் செயல் இழந்தன.

ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த சிகிச்சை பிரிவில் இருந்த மதுரை அருகே பூஞ்சுத்தியை சேர்ந்த மல்லிகா (வயது 55), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரம் பழனியம்மாள் (60) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

இது குறித்து தெரியவந்ததும் உயிரிழந்தோரது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை மருத்துவர்,  “3 பேரும் கவலைக்கிடமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த மருத்துவமனை மரணத்துடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

“பாஜகவின் யோகி ஆதித்யா நாத் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேசத்தில், கடந்த 2017ம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்ததால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 35 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தன.

பாஜக அரசின் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு அந்த துயரச் சம்பவம் வெளிப்படையான சாட்சி.

தமிழகத்தில் இதுவரை அந்த அளவுக்கு மோசமான சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை.

ஆனால், பாஜகவைப் பின்பற்றி ஆட்சி நடத்தும் அதிமுக அரசு, பாஜகவைப் போலவே ஆட்சி நிர்வாகத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்கிறது.

அரசு மருத்துவமனையில், அதிலும் அவசர சிகிச்சை் பிரிவான தலைக்காயப் பிரிவில், தடையற்ற மின்சாரம் வழங்கத் தவறியது மிகப்பெரிய தவறாகும். இப்போது 3 உயிர்கள் அதானல் பலியானதாக கூறப்படுகிறது.

பாஜக இந்தியாவையும், உ.பி உள்ளிட்ட சில மாநிலங்களையும் சீரழித்து வருவதைப் போலவே, அதன் கிளைப்பிரிவாகச் செயல்படும் அதிமுக தமிழகத்தைச் சீரழித்து வருகிறது என்பதற்கு இந்த துயரச் சம்பவமே அப்பட்டமான உதாரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.