முக்கிய செய்திகள்

பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்

 

ஞாயிறு காலை.

சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்) நூலின் அறிமுகமாக நடந்தது.

பழம்பெரும் ’இலக்கிய வட்டம்’ என்றார் வரவேற்புரையில் பெ. கி. பிரபாகரன். இதற்கு ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி, துணைச் செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். ’முகம்’ மாமணி அவர்களால் வளர்க்கப்பட்ட வட்டம்.

தலைமையுரையில் மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’
ச. செந்தில்நாதன், “இலக்கிய வட்டத்திற்கு மட்டும் முக்கிய கூட்டமல்ல இது. தமிழ் இலக்கிய உலகிற்கே முக்கியமான கூட்டம். பாரதிக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி என்பதுபோல சிலர் பேசுகிறார்கள்.

இங்கே சகிப்புத்தன்மை குறைந்துவருகிறது. மூலப்பிரதிகளைத் தேடித் தேடி தொகுத்திருக்கிறார் கடற்கரய். எந்த காப்பிரைட் விதிமீறலும் இவரது பாரதி விஜயத்தில் நடக்கவில்லை” என வாதிட்டார்.

அடுத்து ஆய்வுரை பேராசிரியர் கல்யாணராமன். பாரதி ஒரு நெருப்பு என்று பேச்சைத் தொடங்கினார். நெருப்பாற்றிலே நீந்தி நீந்தி கரைசேர்ந்தவன் பாரதி. எட்டையபுரம் அரண்மனையில் இருந்து ஆய்வைத் தொடங்குகிறார் கடற்கரய்.

மற்ற பாரதி ஆய்வாளர்களிடம் இருந்து அவர் செயல்படும் தளம் வேறாக இருக்கிறது. நவீன இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம் புரிந்த சமகாலத்தன்மையுடன் அவர் இயங்குகிறார்.

பாரதி ஆய்வில் மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. எங்கள் ஆய்வுலகத்தில் வேறு யாரும் நுழைந்துவிடக்கூடாது என்று செயல்படுகிறார்கள். பார்ப்பனர்களின் கையில் இருந்த பாரதி ஆய்வு ஒருகட்டத்தில் பார்ப்பனரல்லாதவர்களிடம் சென்றது. இன்று ஓர் இஸ்லாமியர் எப்படி பாரதி ஆய்வுக்குள் வரலாம் என்று எதிர்ப்புக் காட்டுகிறார்கள். எழுத்துப்பிழைகளை வைத்துக்கொண்டு ஆய்வுகளை அணுகுவது நாகரிகமல்ல.

பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வதற்கு கடற்கரய் எப்போதும் தயாராகவே இருக்கிறார். ஆனால் இங்கே உள்நோக்கத்துடன் அவதூறுகள் செய்யப்படுகின்றன. மண்ணில் தெரியுது வானம் என்றவன் பாரதி. அவன் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டான்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஆய்வுகளின் வழியாக பாரதி பேசப்படுகிறான். மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படுகிறான். வேறெந்த படைப்பாளிக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை. பாரதியின் தொகுப்பு முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.
பாரதி ஆய்வில் ’பாரதி விஜயம்’ புதிய ஆவணமாக கையில் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், பாரதியின் படைப்புகள் தொடர்பான காப்பிரைட் பற்றிய தெளிவுகளை நாம் அடைய வேண்டும். தொகுப்பாளர்களுக்குத்தான் பாரதியின் எழுத்துக்கள் சொந்தமா என்ற கேள்வி எழுகிறது. இந்த நேரத்தில் நாம் கடற்கரய்யை நாம் தாங்கிப்பிடிக்க வேண்டும்” என்று மிக விரிவாகப் பேசினார் கல்யாணராமன்.

பாரதி விஜயம் நூலை வெளியிட்ட சந்தியா நடராசன், பல நூறு நூல்களை வெளியிட்டி ருந்தாலும், பாரதி விஜயத்தால் அடைந்த மன உளைச்சல் அதிகம் என்றார். காப்பிரைட் என்ற பெயரில் நடத்தப்பட்ட அவதூறுகளை எதிர்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஏற்புரையில், பாரதி ஆய்வாளர்களின் மீது தனக்குள்ள மரியாதையை சுட்டிக்காட்டிப் பேசிய கடற்கரய் மத்தவிலாச அங்கதம், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும்,. அண்ணாவின் காஞ்சிபுரம் தேர்தல் பரப்புரை பேச்சை சுட்டிக்காட்டி கதை ஒன்றை பகிர்ந்துகொண்டார். கருத்தின் மீதுதான் விமர்சனமே ஒழிய, தனிப்பட்ட எவர்மீதும் எங்களுக்கு விமர்சனம் இல்லை. நான் பாரதி ஆய்வில் மிகச் சிறியவன்
என தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

கூட்டம் முடிந்தபோது பசியும் வந்திருந்தது. மந்தமான மதிய வெயில்.