முக்கிய செய்திகள்

புதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…


பாஜக எம்எல்ஏக்கள் நலனுக்காக, புதுச்சேரி மக்களின் நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

அதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் அவர்கள் மூன்று பாஜக நியமன எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்பதும், இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டப்பேரவைக்கே நிபந்தனை விதிப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.

பாஜகவில் உள்ள – அதுவும் மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரிவாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அவர்களுக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய நிதி நெருக்கடி”க்குப் பிறகு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கோரி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டும், புதுச்சேரி மக்களின் நெடுங்காலக் கோரிக்கையினை ஏற்று, இதுவரை மாநில அந்தஸ்து அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் – அந்தந்த வட்டார மக்களின் பங்கு மிக முக்கியம் என்பற்கு அடையாளமாகவும், அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும், துணை நிலை ஆளுநர்களின் அத்துமீறலைத் தடுக்கவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படுவது அவசரத் தேவை என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க, அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்த தனித் தீர்மானங்களையே மாண்புமிகு முதலமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் அரசு தீர்மானமாக ஏற்றுக் கொண்டு, அந்த தீர்மானத்தை புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியிருப்பது புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது.

புதுச்சேரி மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறேன் என்று இதுவரை பேசி வந்த துணை நிலை ஆளுநரும், பாஜக தலைமையிலான மத்திய அரசும், புதுச்சேரி மக்களின் திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் தேவையான” நிதி மசோதாவை பா.ஜ.க.வின் குறுகிய அரசியல் லாபத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தாமதம் செய்திருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.

அதிலும், குறிப்பாக நாட்டின் தலைநகரான சிறப்பு அந்தஸ்து பெற்ற டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் கூட புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்பதை புதுச்சேரிக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்ட விதிகள், சட்டமன்ற விதிகள் எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனாலும், துணை நிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி அரசின் அதிகாரங்கள் அனைத்துமே தன்னுடையது என்று “சூப்பர் முதலமைச்சர் போல்,ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், உரிமை கோருவது வியப்பாக இருக்கிறது.

டெல்லி துணை நிலை ஆளுநரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை அவமதிப்பது, புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு அழகல்ல.

ஆகவே புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.