பெண்களை ஏலம் விட்ட புல்லிபாய் ஆப் முடக்கம்..

இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்டதாக புகார் கூறப்பட்ட புல்லி பாய் செயலி முடக்கப்பட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டவிரோத செயலி குறித்து தெரிந்துகொள்வோம்.
கடந்த சில நாட்களாக புல்லிபாய் என்னும் செயலியில் பெண்கள் விற்பனைக்கு என்பது போன்ற அருவருக்கத்தக்க சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து இந்த சட்டவிரோத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுல்லி டீல்ஸ் என்ற செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அவர்கள் விற்பனைக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் சம்பந்தப்ப்பட்ட பெண்களின் ட்விட்டர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் அந்த செயலி முடக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது புல்லி பாய் என்னும் புதிய செயலியில் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மென்பொருள் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா எம்பியான பிரியங்கா சதுர்வேதி ஒரு டிவிட்டர் பதிவில் புகார் தெரிவித்திருந்தார். இத்தகைய தளங்களின் வாயிலாக நடைபெறும் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தான் பலமுறை கேட்டுக் கொண்டும் அதற்கு பலனில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த டிவிட்டர் பதிவை குறிப்பிட்டு பதிவிட்ட அமைச்சர், புல்லி பாய் செயலி முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கணினி அவசரகால பதிலளிப்பு குழு மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புல்லிபாய் செயலியில் தன்னுடைய புகைப்படம் வெளியிடப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்துள்ள அவர், இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இத்தோடு முறியடிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் அமைப்பினரும், குரல் எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்கள் ஒருவரது அடையாளமாகவே மாறிவிட்ட நிலையில், அதில் பகிரப்படும் தகவல்களைக் கொண்டு நடைபெறும் இத்தகைய சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படவேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் :பிரதமர் மோடி புகழாரம்..

Recent Posts