முக்கிய செய்திகள்

ப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்?: புவனன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திராகாந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மட்டுமின்றி, டெல்லி அரசியலிலும் கோலோச்சி வருபவர் ப.சிதம்பரம்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில், மற்றவர்களைக் காட்டிலும் ப.சிதம்பரத்தின் பின்னணி வலுவானது மட்டுமின்றி, சுவாரஸ்யம் மிக்கதும் கூட. செட்டி நாட்டு சீமான் (நாட்டுக்கோட்டை நகரத்தார்) குடும்பத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், சிந்தனை ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் முழுமையான முதலாளித்துவ வாதியாக இருப்பது மிக இயல்பானது.

ஆனால், அவரது கல்லூரிப் பருவத்தில், இடதுசாரி சிந்தனை மிக்கவராக இருந்தது மட்டுமின்றி, அவருடைய சக தோழர்களான இந்து என்.ராம், மைதிலி சிவராமன், போன்றோருடன் சேர்ந்து தி ரேடிகல் ரிவிவ்யூ என்ற பத்திரிகையையும் நடத்தி வந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… .

கார்கி இளவேனில், கவிஞர் தணிகைச்செல்வன் போன்றோரெல்லாம் இந்தக் குழுவில் இணைந்து செயல்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் எங்கெல்ஸ் என்றெல்லாம் அப்போது ப.சிதம்பரம் பாராட்டப்பட்டிருக்கிறார்.

பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று திரும்பும் போது, அவரது பாரம்பரியத்திற்கே உரித்தான முதலாளித்துவ குணங்களோடு திரும்பி வந்திருக்கிறார்.

ஆக இளம் வயதிலேயே மார்க்சிய பாசறைக்குள் ஊடுருவி, அதில் இருந்து வெளியேறி அதற்கு எதிரான முதலாளித்துவ முகாமிற்குள் புகுந்தவர் ப.சிதம்பரம். மார்க்சியம் அறிந்த முதலாளித்துவவாதி என்ற வகையில், காங்கிரசின் மற்ற தலைவர்களுக்கு இல்லதா சில அழுத்தமான கோட்பாட்டுக் குணாதிசியங்கள் அவருக்கு உண்டு.

ப.சிதம்பரம் உள்துறை அமை்சசராக வந்த போது மாவோயிஸ்டுகளின் கோபம் அதிகரிக்க அவரது இந்தப் பின்னணியும் ஒரு காரணம். மாவோயிஸ்டுகளின் தத்துவார்த்த ரீதியான பலத்தையும், பலவீனத்தையும் நன்கறிந்தவர் என்பதால், மற்றவர்களை விட ப.சிதம்பரம் தங்களுக்கு ஆபத்தானவர் என்று அவர்கள் கருதியதில் வியப்பில்லை.

இவற்றையெல்லாம் விட, ராஜீவ் காந்தி அரசியலுக்குள் அழைத்து வரப்படும் போது, அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர்.

கடந்த 2014 முதல், நாடே மோடி எனும் அரசியல் சூறாவளியில் சிக்கிச் சின்னாபின்னக் கொண்டிருக்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதே பாஜகவின் இலக்கு என்பதைப் பகிரங்கமாக அவ்வப்போது எழுதியும், பேசியும் வரக் கூடிய காங்கிரசின் தத்துவார்த்த ஆளுமையாகவும் மிளிர்ந்து வருகிறார்.

மைய அரசியலில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பன்முக ஆளுமையை, தமிழகம் என்ற வட்டத்திற்குள் சுருக்க காங்கிரஸ் தலைமை விரும்புமா… அது சரியான அணுகுமுறையாக இருக்குமா… என்ற கேள்விகள் எழுவதில் வியப்பில்லை.

தென் மாநிலங்களை கபளீகரம் செய்ய மெகா திட்டங்களோடு களமிறங்கி சதுராடி வரும் பாஜக பரிவாரத்தினருக்கு, தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 67ல் இழந்த செல்வாக்கை இதுவரை பெற முடியவில்லை. கர்நாடகத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக சித்தராமய்யா உருவெடுத்திருக்கிறார். அதுபோல தமிழகத்திலும் காங்கிரசுக்கு ஒரு தலைமை தேவை என்று காங்கிரஸ் மேலிடம் கருதியிருக்கலாம். அந்த வகையில் ப.சிதம்பரத்தை முன்னிறுத்த ராகுல் முடிவெடுத்திருக்கிறார் என்றால், அது அரசியல் முதிர்ச்சி மிக்க அணுகுமுறை என்பதை மறுப்பதிற்கில்லை.

பிராந்திய அளவிலான தலைவர்களை வளர விடாமல் செய்ததே அந்தக் கட்சியின் தேய்மானத்திற்குக் காரணம் என்பதை ஒருவேளை தற்போதைய தலைமை உணர்ந்திருக்கலாம். ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரசுக்கு தலைமை தாங்கச் சொல்வதற்கான காரணம் அதுவாகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில், மைய அரசியலிலும் கூட, பாஜகவின் தத்துவார்த்த ரீதியான தாக்குதலை, ப.சிதம்பரம் அளவுக்கு கருத்து வலிமையோடு இடம் கண்டும், இனம் கண்டும், எதிர் கொள்ளக் கூடிய தலைவர்கள் அந்தக் கட்சியில் இருப்பதாக தெரியவில்லை.

ப.சிதம்பரத்தின் மீது மற்ற கட்சியினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் உண்மையும் இருக்கலாம். ஆனால் காங்கிரசைப் பொறுத்தவரை ப.சிதம்பரம் மிகப்பெரிய அறிவுச் சொத்து. எதிரிகளை வலுவான கருத்துகளுடன் எதிர் கொள்ளக் கூடிய பேராளுமை.

பாஜகவின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டிய தற்போதைய இக்கட்டான தருணத்தில், ப.சிதம்பரம் போன்றவர்களை பயன்படுத்துவதில் முன்னெப்போதையும் விட கவனத்துடன் காய் நகர்த்த வேண்டிய கடமையும், பொறுப்பும் காங்கிரசுக்கு இருக்கிறது.