இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு இருக்க முடியுமா என்று வேதனையும் அதிர்ச்சியுமாக இருக்கிறது.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் எட்டு மாவட்டங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. பெரும் பேரழிவை சந்தித்த மக்களுக்கு சிறு துரும்பு உதவி செய்யக்கூடத்துப்பு இல்லாதது இந்த எடப்பாடியின் அரசு. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்களைப் பார்க்க வேண்டும் என்ற இரக்க குணம் கூட இல்லாதவராக முதலமைச்சர் இருக்கிறார்.
16ம் தேதி கஜா புயலால் பெரும்பாதிப்பை மக்கள் எதிர்கொண்டார்கள். அப்போது விழா கொண்டாட்டத்தில் இருந்தார் முதலமைச்சர். மறுநாளாவது பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றிருக்க வேண்டும். போகவில்லை. அமைச்சர்கள் அனைவரையும் அனுப்பி இருக்க வேண்டும். ஒன்றிரண்டு அமைச்சர்கள் போனார்கள்.அவர்களும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறித் தப்பினார்கள். புயலால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஒரு அமைச்சர் பேட்டி தருகிறார். புயல் பாதிப்புகளைக் காட்டக்கூடாது என்று இன்னொரு அமைச்சர் ஊடகங்களை மிரட்டுகிறார். நிவாரண உதவி கேட்கும் மக்களையே காவல்துறையை வைத்துமிரட்டுகிறார்கள். கைது செய்கிறார்கள். என்ன குரூரமான மனநிலை இது?
இந்த நிலையில் முதலமைச்சர் செல்ல இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது. 18,19 என அவர் செல்லும் தேதிகளும் நேரங்களும் மாற்றப்பட்டன. முதலமைச்சர் எங்கே, எடப்பாடி எங்கே, தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விகள் கிளம்பிய நிலையில் வேறு வழியில்லாமல் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்த வழி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்.
அமைச்சர்களையும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் பார்த்தாலே மக்கள் விரட்டுகிறார்கள். அதனால் தான் கார் பயணம் செல்லாமல் வான் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார் முதல்வர். இதைவிடக் கேவலம் என்ன வேண்டும்? விமானத்தில் வந்துவிட்டு ஹெலிகாப்டரில் சில ஊர்களுக்கு சென்ற முதல்வர் அங்கிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரமே காரில் பயணம் செய்துள்ளார். அங்கும் மக்களைச் சந்திக்காமல் குறிப்பிட்ட இடத்தில் சிலரை மட்டும் வரவைத்து நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார். முதலமைச்சர் பயணம் செய்யும் சாலையில் பொதுமக்கள் நடமாட தடை வித்துள்ளது காவல்துறை. முதலமைச்சருக்கு பல அடுக்கு பாதுக்காப்பு தரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பைத்தாண்டிச் சென்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை எப்படி வைக்க முடியும்?
முதலமைச்சரிடம் கோரிக்கை மனு தரப்போகிறேன் என்று சொல்லிய பொன்னவராயன்கோட்டை வீரசேனன் என்ற விவசாயியை அநியாயமாகக் கைது செய்துள்ளார்கள். இப்படி பலரும் மிரட்டப்பட்டுள்ளார்கள். இந்த மிரட்டல் நடவடிக்கை மக்களை இன்னும் கொந்தளிக்க வைத்துள்ளது. மக்களிடம் நேரில் குறைகேட்பது தான் குறைகேட்புப் பயணமாக இருக்க முடியும். ஹெலிகாப்டரில் செல்வது கண் துடைப்பு பயணம் மட்டுமே. இதற்கு முதலமைச்சர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது தான் மக்களின் எண்ணம்.
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடாமலேயே நிவாரணப் பணிகளுக்கு 1000 கோடி என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர். பல்லாயிரம் கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரம் கோடியை வைத்து நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவும் அடிப்படை வசதிகளும் தான் செய்து தர முடியும் என்று முதலமைச்சருக்கு தெரியாதா? முகாம்களில் உள்ளவர்கள் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வார்கள்? ஒரு தென்னை மரத்த்துக்கு 1100 ரூபாய் வழங்கலாம் என்று கணக்கிட்ட புத்திசாலி யார்? லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன. ஒவ்வொரு மரமும் 30 முதல் 40 ஆண்டுகள் வயதானது. குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது தந்தாக வேண்டும். புதிதாக மரம் வைத்தால் அது பலன் தர 8 ஆண்டுகள் ஆகும். மரத்துக்கு நிவாரணமாக 600 ரூபாயும் அதை வெட்டி அகற்ற 500 ரூபாயும் கணக்கிட்டவருக்கு விவசாயிகளின் வேதனை தெரியுமா? ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தென்னையின் அருமை தெரியுமா?
சும்மா ஒப்புக்கு ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தி தான் செயல்படுவதாக காட்டிக் கொள்வதற்காக 1000 கோடி என்று அறிவித்துள்ளார் முதல்வர். இந்த பொறுப்பற்ற அலட்சியத்தனங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக அறிக்கை பெற்று சேத மதிப்பை முழுமையாக அறிந்த பிறகு முழுமையான நிதி அறிவிப்பைச் செய்ய வேண்டும். மத்திய அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கி சேதங்களை முழுமையாக உணர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும். அவர்களது கோபத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒழுங்காக, முறையாக அரசாங்கம், செயல்பட்டால் எதற்காக மக்கள் கோபப்படப் போகிறார்கள்?
மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே இந்த அரசு அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. இதற்கு மக்கள் மன்றத்தில் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஓடி ஒளிந்து கொள்வதால் அதிலிருந்து தப்ப முடியாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.