மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார்.
இதையடுத்து, இஷ்ரத் ஜஹான் முத்தலாக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 4 பேர் முத்தலாக் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். இவர்கள் அனைவரது வழக்குகளையும் 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்ததை தொடர்ந்து, முத்தலாக் நடைமுறைக்கு ஆறு மாதங்கள் இடைக்கால தடை விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா நகரில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.
இதுதொடர்பாக, மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், இஷ்ரத் ஜஹான் ஹவுரா நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.