முக்கிய செய்திகள்

மேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்?: ரவிக்குமார்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட அரசாணையின்படியும் அதற்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால், மேலாண்மை ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.

டிசம்பர் 3 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை கட்டுவதற்குத் தமிழகம் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ‘தற்போது விரிவான அறிக்கை தயாரிப்பதற்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி அனுமதியளிக்கக் கூடாது என மத்திய நீர் ஆணையத்தைத் தடுக்க முடியாது. அணை கட்டுவதற்கு முன்பு மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்’ என ஆணையத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது, இதுவொரு அதிகாரம் இல்லாத அமைப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அது இப்போது உண்மையாகிவிட்டது.

நீர்மின் திட்டங்களும் தமிழகத்தின் எதிர்ப்பும்

காவிரிக்குக் குறுக்கே நீர்மின் திட்டங்களை உருவாக்கும் சாக்கில் நீர்த்தேக்கங்களைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 50 ஆண்டுகளாகவே முயற்சித்துவருகிறது. அப்படி நீர்மின் திட்டங்களில் தண்ணீர் தேக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு பெருமழைக் காலத்தில் உபரியாக தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். அதை உணர்ந்துதான் கர்நாடகத்தின் நீர்மின் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

கர்நாடகமே தனது சொந்தப் பொறுப்பில் மின்உற்பத்தி நிலையங்களை அமைத்தால், அங்கு உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் முழுவதும் அந்த மாநிலத்துக்கே சொந்தமாகிவிடும். ஆனால், அவற்றை மத்திய அரசு அமைக்குமேயானால், மின்சாரத்தில் தமிழகத்துக்கும் பங்கு கிடைக்கும் என்பதால் அன்றைய திமுக அரசு மத்திய அரசுக்குச் சொந்தமான என்.ஹெச்.பி.சி. மூலமாக அந்த மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் எனவும், அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் கர்நாடகம் 60% எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு 40% தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அப்போதிருந்த மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசும் அதை ஒப்புக்கொண்டது. ஆனால், கர்நாடகம் அதற்கு இணங்கவில்லை. அதனிடையில் சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படாத நிலையில், அந்த அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியதால் அது நிறுத்தப்பட்டது.

நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும்

நீர்மின் நிலையங்கள் அமைக்கும் பிரச்சினையை கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி நடுவர் மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றன. அதுகுறித்து என்.ஹெச்.பி.சி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தன. ‘அப்படியான நீர்மின் திட்டங்கள் எப்போது உருவாக்கப்பட்டாலும் அவற்றில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய மாதாந்திர தண்ணீரின் அளவாக நடுவர் மன்றம் வரையறுத்துள்ள அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகவோ, அதைச் சீர்குலைக்கும் விதமாகவோ இருக்கக் கூடாது என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பின் கூறு 13-ல் குறிப்பிட்டது (பாகம் 5, பக்கம் 242).

அதே கருத்தை உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. (இறுதித் தீர்ப்பு, பக்கம்: 342).

காவிரியில் அமைக்கப்படும் நீர்மின் நிலையங்களால் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவு பாதிக்காது என்று கர்நாடக அரசு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல என்பதை உணர்ந்துதான், மேகேதாட்டுவில் அணையோ, நீர்மின் நிலையமோ கட்டக் கூடாது என 2013 செப்டம்பரில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்தார். பிரதமருக்குக் கடிதமும் எழுதி வலியுறுத்தினார்.

2015-ல் மேகேதாட்டு திட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசை அன்றைய அதிமுக அரசு வலியுறுத்தியபோது, அதற்கு 23.04.2015-ல் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர், ‘2014 பிப்ரவரியில் சிவசமுத்திரம் திட்டத்துக்கான அனுமதி கோரப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களின் கருத்தை அறிய வேண்டும் என அது திருப்பி அனுப்பப்பட்டது. மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை’ எனத் தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நடந்தபோது, அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘மேகேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்தை உபரி நீரைத் தேக்கி வைப்பதற்கான ஏற்பாடாக ஏன் கருதக் கூடாது?’’ என தமிழகத்துக்காக வாதாடிய வழக்கறிஞரிடம் கேட்டார். ‘கர்நாடகம் அல்லாத மூன்றாவது தரப்பின் கட்டுப்பாட்டில் அந்த நீர்த் தேக்கம் இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்கிறோம்’ என அவர் பதிலளித்தார். வழக்கறிஞர் கூறியது கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறது என அப்போதே அதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காவிரிப் பிரச்சினையில் காட்டப்பட்ட உறுதியை அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசு கைவிட்டுவிட்டதா?

மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாக நியாயம் வழங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. 2019 பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு அப்பட்டமாக கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது. அரசியல் நோக்கம் கொண்ட இந்த முடிவை அரசியல் களத்திலும் எதிர்கொண்டாக வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒட்டுமொத்தத் தமிழகமும் ஓரணியில் இருக்கிறது எனக் காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இதற்காகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

– ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.

நன்றி: இந்து தமிழ்திசை