மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு மேல் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தஞ்சை மாவட்ட கலேக்டர் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும்.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியிலிருந்து 80,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 15வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.