முக்கிய செய்திகள்

ஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்

பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் மைகேல் ஜாக்சனின் தந்தை ஜோ சாக்சன் மரணமடைந்தார். அவரு்ககு வயது 89.

புற்று நோய் முற்றிய நிலையில் லாஸ் வேகாசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோ ஜாக்சன் புதன் கிழமை மரணமடைந்தார். அவரது மரணத்தை, பேரனான தாஜ் சாக்சன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

மகன் மேக்கேன் ஜாக்சனைப் போலவே ஜோ சாக்சனின் வாழ்க்கையும், துயரங்களும் போராட்டங்களும் மிக்கதுதான். ஆனால், தந்தைக்கும் மகனுக்கும் எப்போதுமே ஒத்துப் போனதில்லை என்பதுதான் துயரங்களில் எல்லாம் பெரும் துயரம். 1928 ஆம் ஆண்டு  அமெரிக்காவின் ஃபவுன்டெய்ன்ஸ் மலைப் பகுதியில் உள்ள அர்கான்சாவில் பிறந்த ஜோ ஜாச்கசனுக்கு 5 வயதாகும் போதே, அவரது தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர். குறிப்பிட்ட காலம் வரை தந்தையுடன் வாழ்ந்த ஜோ, 18 வயதாகும் போது தாயுடன் சென்று விட்டார். கிதார் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட ஜோ ஜாக்சனுக்கு (மைக்கேல் ஜாக்சனின் இசை ஞானம் இங்கிருந்துதான் பிறந்திருக்கிறது) பாக்சர் ஆக வேண்டும் என்ற ஆசையும் இருந்திருக்கிறது. ஆனால் 1949 ஆம் ஆண்டு கேதரினை திருமணம் செய்து, 1950ல் முதல் குழந்தை பிறந்ததோடு அந்த ஆசைகளை எல்லாம் ஜோ ஜாக்சன் மூட்டை கட்டி வைத்துவிட்டார். 11 குழந்தைகளுக்கு தந்தையானார். மைகேல் ஜாக்சன் இரண்டாவது குழந்தை. 1960களில் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவை மகன்களைக் கொண்டே தொடங்கி நடத்தி வந்தார். 1970களில் அந்தக் குழு கொடிகட்டிப் பறந்தது. ஆனால், தந்தைக்கும் மகனுக்குமான அந்தப் பிணைப்பு நீண்டநாள் நீடிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன், தன் நிகழ்ச்சி ஒப்பந்தங்களைக் கவனித்து வந்த தந்தை ஜோ ஜாக்சனை வெளியேற்றினார். அதன் பின்னர் அவர் வழி தனி வழியானது. இன்டியானாவில் எஞ்சிய காலத்தைக் கழித்து வந்தார். பின்னர் மகள்கள், பேரன் பேத்திகள் என காலம் சுழன்று கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சிக்கான ரிகர்சலின் போதெல்லாம் தன் தந்தை கையில் பெல்ட்டோடு தான் நிற்பார் என்றும், அவர் ஒரு கொடுமைக் காரர் என்றும் மைகேல் ஜாக்சன் தன் தந்தையைப் பற்றி பல நேரங்களில் விமர்சித்திருக்கிறார். “ஜாக்சனைக் கொன்று விடாதீர்கள்” என தாயார் கேதரின் கதறி அழும் வரை தந்தை ஜோ ஜாக்சன் தம்மை அடித்து துன்புறுத்தி இருப்பதாக மைக்கேல் ஜாக்சன் விமர்சித்திருக்கிறார். இறுதிவரை இருவருக்குள்ளும் நல்லுறவு மலராமலே போனது. ஜோ ஜாக்சனின் மற்ற பிள்ளைகளும் கூட இளம் வயதில் தங்களைக் கொடுமைப் படுத்திய தந்தையாகவே ஜோ ஜாக்சனைப் பார்த்து வந்தனர். ஆனாலும், டிட்டோ என்ற ஜோ ஜாக்சனின் மகள், 2017 ஆம் ஆண்டு விருது வாங்கும் நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் தந்தை இல்லாவிட்டால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம் என நெகிழ்வுடன் பெருமை பாராட்டினார்.  2013 ஆம் ஆண்டு சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜோ ஜாக்சன், தாம் அப்படி ஒரு தந்தையாக இருந்ததற்காக இப்போதும் வருத்தப்படவில்லை என்று உறுதி படக் கூறியிருந்தார். தான் அப்படிக் கண்டிப்புடன் இல்லாமல் போயிருந்தால், அவர்கள் காவல்நிலையத்தில் இருந்திருப்பார்கள் என்றும் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அவர்களை நல்வழியில் நடத்திச் செல்வதற்காகவே கண்டிப்புடன் நடந்து கொண்டதாக ஜோ ஜாக்சன் கூறியிருந்தார். ஆனால், மைக்கேல் ஜாக்சனின் கனவுலகத்திற்குள் ஜோ சாக்சன் என்ற கறார் பேர்வழிக்கு கடைசிவரை இம்மியளவும் இடமில்லாமல் போனது. எப்படியோ, ஒரு வசீகர வலியை மகனாகப்  பெற்றெடுத்த தந்தை என்ற வகையில், ஜோ ஜாக்சனின் வாழ்வும், மரணமும் மறக்க முடியாதவை.