முக்கிய செய்திகள்

ராகுல் காந்தியுடன் திருமணம் என்று வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மறுப்பு..

ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரிவித்துள்ள காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, ராகுல் தனது சகோதரர் போன்றவர் என விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சதார் அதிதி சிங். இவர், ராகுல்காந்தியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம், சமூக வலைதளமான வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவி வருவதோடு, இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், இதற்காக ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி, அதிதி சிங்கின் வீட்டில் பேசிவருவதாகவும் வதந்தி பரவியது.

இதுபோன்ற வதந்தி செய்தியை கேட்டு ஆத்திரம் அடைந்த அதிதி, கர்நாடக தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸிற்கு கலங்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி, தனது மூத்த சகோதரர் போன்றவர். அவருக்கு வருடாவருடம் ராக்கி கட்டுவதாகவும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற வதந்திகளுக்கு பின்னால் உள்ளவர்கள், பார்த்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிதி.

தனது தந்தையின் விருப்பத்திற்காக, ஃபேஷன் துறையை விட்டு அரசியலுக்கு வந்துள்ள அதிதி, 2017 தேர்தலில் 90,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். அதிதியின் தந்தை அகிலேஷ் சிங், ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏவாக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.