ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் – சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் சர்க்கரை கிலோ விலை தற்போது விற்கப்படும் 13 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்படும் என்று குதிரை பேர அரசு அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பது தான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம். இன்று தமிழகத்தில் பட்டினி சாவுகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அமல்படுத்திய ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் என்பதை நாடே அறியும். இதனால்தான் உச்சநீதிமன்றமே திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முதலில் எதிர்ப்பதாகவே முடிவு எடுத்தது. பிறகு தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் , “சட்டம் இயற்றப்படுவதால் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடுகள் குறைக்கப்படாது. குறிப்பாக அதே விலையில் வழங்கப்படும்” என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதோடு மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் அந்த உறுதிமொழியை அளித்தார். இந்த உறுதிமொழிக்குப் பிறகுதான் தி.மு.க. உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை ஆதரித்தது.
நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரை காப்பாற்றியது என்பதை மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாது. தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புக் கொண்ட குதிரை பேர அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாடாளுமன்றத்தில் மத்திய உணவு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி, தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.
கடமையைச் செய்யத் தவறி இன்றைக்கு பொது விநியோகத்திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மான்யங்களை எல்லாம் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசு இன்றைக்கு திடீரென்று சர்க்கரை விலையை இரு மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசுக்குப் அஞ்சி நடுங்கி ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு போன்றவற்றால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை எப்படி தட்டிக் கேட்காமல் அமைதி காத்ததோ அதே போல் இப்போது சர்க்கரை மான்யம் ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடவே இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மான்யத்திற்காக சென்ற வருடம் நிதி ஒதுக்காத போதும் உணவுத்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ வாய் திறக்கவில்லை. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு கையெழுத்துப் போட்ட குதிரை பேர அரசு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசு மான்யத்தை விட்டுக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதித்து விட்டது என்பது தான் உண்மை. அதனால்தான் இன்றைக்கு சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நாளடைவில் பொது விநியோகத் திட்டத்தையே ரத்து செய்வதற்கு கூட இந்த குதிரை பேர அரசு சம்மதித்து அனைத்து தரப்பு மக்களையும் இருட்டில் தள்ள தயங்காது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விஷம் போன்ற விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அரசை கண்டித்தும், சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேசன் கடைகள் முன்பும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, ஆங்காங்கே உள்ள மக்களை அரவணைத்துக் கொண்டு இந்த கண்டன ஆர்பாட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’’