முக்கிய செய்திகள்

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடக அரசு..


கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரும் நிலையில், அங்குள்ள பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மேலும், இதற்கான பரிந்துரையையும், மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 110 இடங்களின் வெற்றியை லிங்காயத் சமூகத்தினர் முடிவு செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் 17 சதவீத மக்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவரின் தனிசித்தாந்தங்களை பின்பற்றி தனியான வழிபாட்டு முறையை கடைபிடித்து வருகின்றனர். உலகம் அனைத்துக்கும் ஒரே மதம், சிவன் என்ற அடிப்படையில் சிவலிங்கத்தை மட்டுமே வழிபடுவர்களாகவும் லிங்காயத்துக்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களை தனிமதத்தினர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக லிங்காயத் சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

கர்நாடக்தில் ஆண்ட பல்வேறு முதல்வர்களிடமும் கோரிக்கை அளித்து இருக்கின்றனர். ஆனால் இவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அடுத்த இரு மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் நடக்கப்போகும் தேர்தலில் லிங்காயத்துக்கள் சமூகத்தினரின் வாக்கு, தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியபங்காக இருக்கும் என்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு் ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரைகள் குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று ஒப்பதல் அளிக்கப்பட்டு, லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:

கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில், லிங்காயத்துக்கள், வீர சைவ லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அங்கீகரித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் சிறுபான்மை அங்கீகாரம் என்பது, ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அளிக்கப்பட்டது. இது மாநிலத்தில் உள்ள மற்ற சிறுபான்மையினர்களின் உரிமையை பறிக்காது, பாதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.