ரோபாட்கள், கணினிகள், எந்திரங்கள் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா எனத் தெரியவில்லை. குறிப்பாக ரோபாட்கள் பயிற்சி சார்ந்த, பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அச்சம் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சிக்காக்கோ பல்கலையில் நிதித்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கேரளா அரசு சார்பில் கொச்சி நகரில் நடந்த சர்வதேச டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்ற ரகுராம் ராஜன் பேசியதாவது:
”ரோபாட்களிலும், கணினிகளிலும் ஏற்பட்டுவரும் அதிநவீன மாற்றங்கள் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் அனைத்தையும் பறித்துக் கொள்ளலாம். அது பயிற்சி பெற்று செய்யும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது பயிற்சியின்றி செய்யும் வேலையாக இருந்தாலும் சரி ரோபாட்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்போகிறது.
என்னைப் பொறுத்தவரை அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களின் வேலைவாய்ப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகலாம். ஏனென்றால், அனைத்து வேலை வாய்ப்புகளையும், கணினியும், ரோபாட்களும் செய்யத் தொடங்கிவிடும்.
வேலைக்கு அதிகமான கற்பனைத்திறனும், மதிநுட்பமும் தேவைப்படும், அப்போது இயற்கையாகவே மனிதர்களை வேலைக்கு வைப்பது குறைந்து கணினிக்கு மாறும்.
இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பங்களைத் தேவைக்கு ஏற்றார்போல் ப யன்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தில் உலகளவில் சிறந்த நாடாகவே இருந்து வருகிறது. மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்கள் சில இடங்களில் ஆக்கமிரத்துக்கொண்ட போதிலும், பெரும்பாலான வேலை இழப்புகள் பறிபோய்விட்ட அச்சமின்றியே செயல்பட்டு வருகிறது.
தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரிய தடை என்னவென்றால், மனிதர்களுக்குப் பதிலாக எந்திரங்கள் வரும்போது, அங்குவேலை இழப்பு ஏற்படும். தொழிற்புரட்சி ஏற்பட்டு 200 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மனிதர்களுக்கு வேலை இருந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பெரிய அளவில் விரிவடையும். அப்போது, நம்மால் ரோபாட்களை பயன்படுத்துவதையும், எந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதையும், கணினிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க முடியாது.
இந்தியாவின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் மிகப்பெரிய அளவில் புரட்சி தேவைப்படுகிறது. கல்வியில் ஒவ்வொருபடி நிலையிலும் பலவீனமான நிலையைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். உள்நாட்டளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் திறமையான இந்தியர்களை இங்கு கொண்டு வர வேண்டும்.”
இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.