முக்கிய செய்திகள்

விராட் கோலி அதிரடி சதம்: 6வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..


தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆறாவது ஒரு நாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்ரிக்க அணி 46.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், இந்திய அணிக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் ஐந்து போட்டிகள் முடிவில், இந்தியா 4-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. ஆறாவது மற்றும் கடைசி போட்டி இன்று செஞ்சூரியனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வருக்கு ஓய்வு தரப்பட்டு, ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தென் ஆப்ரிக்க அணிக்கு ஷர்துல் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (1௦), கேப்டன் மார்க்ரம் (24) ஆட்டமிழந்தனர். சகால் ‘சுழலில்’ டிவிலியர்ஸ் (30) சிக்கினார். பின், இணைந்த ஜோன்டோ, கிளாசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பும்ரா பந்தில் கிளாசன் (22) அவுட்டானார். தாகூர் பந்துவீச்சில் பெகார்டியன் (1) திரும்பினார். கிறிஸ் மோரிஸ் 4 ரன்கள் எடுத்தார். ஜோன்டோ (54) அரை சதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 46.5 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். 205 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கேப்டன் விராட் கோலி அதிரடியாக சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இத்துடன் ஒரு நாள் அரங்கில் தனது 35 வது சதத்தை பதிவு செய்தார். 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது.