முக்கிய செய்திகள்

குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனான் நான் அவனி்ல்லை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்

குட்கா ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதில் தமக்கு தொடர்பில்லை என சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குட்கா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி,  முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் அடுத்தடுத்து பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கடந்த 2011 லிருந்து 2016 வரை சென்னை பெருநகர காவல் ஆணையராக 3 முறை பொறுப்பில் ஜார்ஜ் இருந்த போது இந்த ஊழல் நடைப்பெற்றுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை நொளம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஜார்ஜ், தான் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற போது குட்கா ஊழல் குறித்த வதந்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக செய்தியானது என்றார்.

இதையடுத்து தமிழக அரசுக்கு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விரிவாக கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். குட்கா விவகாரத்தில் பணம் கைமாறியதாக தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் குறிப்பிட்டுள்ள 2016 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மூன்று தேதிகளிலுமே தான் சென்னை மாநகர காவல் ஆணையராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து அப்போது நுண்ணறிவிப் பிரிவில் துணை ஆணையராக பணியாற்றிய விமலாவை அழைத்து விசாரிக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார். அவர் கொடுத்த அறிக்கையில், குட்கா குடோனில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் குழு கடந்த 2014-ம் ஆண்டில் சோதனை நடத்தி பான் மசலாவை கண்டுபிடித்ததாக ஜார்ஜ் தெரிவித்தார். ஆனால் அந்த காவல் ஆய்வாளர்களை தொடர்பு கொண்ட மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார், குட்கா விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு செம்மரம் கடத்தல் தடுப்பு தொடர்பான பணிக்கு செல்லுமாறு உத்தரவிட்டதாக விமலா அறிக்கை வழங்கியதாகவும் ஜார்ஜ் கூறினார். 2015-ல் டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசுக்கு அப்போதே நடவடிக்கை எடுக்க அறிக்கை அனுப்பி விட்டதாகவும் அவர் கூறினார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போனது, தான் மீண்டும் பொறுப்பேற்ற போது தெரியவந்தது என குற்றம்சாட்டிய ஜார்ஜ், மேல் அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் முறையாக பணியை மேற்கொள்ளாத ஜெயக்குமார் மீது ஆண்டு அறிக்கையில் தான் அதிருப்தி தெரிவித்ததாக குறிப்பிட்டார். அப்போது நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக இருந்த வரதராஜூ மற்றும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் நல்லசிவம் ஆகியோரும் கூட குட்கா விவகாரம் குறித்து தமக்கு தெரிவிக்கவில்லை என்று ஜார்ஜ் கூறினார்.

சென்னை காவல் துறையில் உள்ள 300 காவல் நிலையங்கள், 7 படி நிலைகளில் உள்ள அதிகாரிகள் இவற்றில் எங்கோ நடந்த தவறுக்கு தான் மட்டுமே எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பிய ஜார்ஜ், குட்கா வழக்கில் தம்மை சிக்க வைப்பதற்காகவும், தாம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாவதை தடுக்கவும் நடந்த சதியென்றும் குற்றம்சாட்டினார்.

​George Reax in Gutka Scam