ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 6) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
“கரோனா தொற்றைவிடவும் பன்மடங்கு கொடுமையான ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஊழல் கொள்ளைப் பிடியிலிருந்து, இந்த மாநிலத்தை மீட்டு முன்னேற்றப் பாதையில் வளர்த்தெடுத்துக் காப்பதற்கான ஜனநாயகத் திறவுகோல்தான், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்.
ஜனநாயகக் களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும் இயக்கமான திமுக, இந்தக் கரோனா பேரிடர் காலத்திலும், தொடக்கம் முதலே தமிழக மக்களுக்குத் துணையாக நிற்கிறது.
‘ஒன்றிணைவோம் வா’ எனும் மாபெரும் செயல்திட்டத்தினால், மக்களின் துயர் துடைத்த திமுக, பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் கொண்டு தொடர்ந்து பொதுக் காரியங்களை ஆற்றி வருகிறது.
இந்தியாவிலேயே காணொலி வாயிலாகப் பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமைக்குரிய இயக்கமாக இது திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, முப்பெரும் விழாவும் அதில் விருதுகள் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றன.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மட்டும்தானா முப்பெரும் விழா, அனைத்து மாவட்டங்களிலும் நடத்திக் காட்டுவோம் என மாவட்ட செயலாளர்கள் காட்டிய முனைப்பின் காரணமாக, காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களிலும் முப்பெரும் விழாக்கள் எப்போதும் இல்லாத எழுச்சியுடன் நடைபெற்றன. அதனைப் பல நூறு இடங்களிலும் உள்ள திமுக அமைப்பினர் காணொலி வாயிலாக இணைத்து, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மகிழ்ந்திடும் வகையில் வெற்றிகரமாக நடத்தினர்.
கரோனா காலத்தின் நடைமுறைச் சிக்கல்களைத் தொழில்நுட்பத்தின் மகத்தான உதவியுடன் திமுக வென்றுகாட்டியது. அதே கரோனா காலத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் கஜானாவைக் கொள்ளையடித்தும், வெற்று விளம்பரம் தேடிக்கொண்டும் மக்களை ஏமாற்றுகிறது அதிமுக அரசு.
மக்களின் நலனுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக நாம், கரோனா நேரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்கிறார்கள் காவல்துறையினர். அதேநேரத்தில், மாவட்ட ஆய்வு, நல உதவி என்ற பெயரில் அரசாங்கப் பணத்தில் அரசியல் செய்யும் முதல்வரின் நிகழ்வுகளில் எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் கூட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்து படம் காட்டி வருகிறார்கள். அவரது கார் போகும் பாதையில் ஆட்களைத் திரட்டி வைத்து, ஏற்கெனவே கொடுத்த பயிற்சியின்படி குரலெழுப்பச் செய்கிறார்கள். போகட்டும்… இன்னும் சில மாதங்களுக்குத்தான், தவறான இந்தத் தடமும் ஆடம்பரப் படமும்!
திமுக என்பது எப்போதும் மக்களின் இயக்கம். ஜனநாயகம் காப்பதற்காக இரண்டு முறை ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம். அதனால்தான் ஜனநாயகக் களமான சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டு, நாள்தோறும் மக்களை நோக்கிக் கடமை ஆற்றச் சென்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான தூய செயல்பாட்டின் ஒரு கட்டம்தான், ‘தமிழகம் மீட்போம்’ என்கிற பெருந்திரள் பொதுக்கூட்ட நிகழ்வுகள்.
முதல்கட்டமாக ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் காணொலி வழிப் பொதுக்கூட்டங்கள், லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மகத்தான முறையிலே வெற்றிகரமாக நடைபெற்றிருக்கின்றன.
பெரியாரின் சொந்த மண் – அண்ணாவின் அரசியல் பாசறை – கருணாநிதியின் குருகுலம் எனும் பெயர் பெற்ற ஈரோடு மாவட்டத்தில் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு மண்டலத்தில் திமுக பெற்றுள்ள புத்தம் புது எழுச்சிக்குச் சான்றாக ஈரோட்டில் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் தக்க வண்ணம் சிறப்பாக நடைபெற்றது.
வழக்கமான பொதுக்கூட்டம் என்றால் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் உள்ள பெரிய திடலிலே மேடை அமைத்து, அங்கே திரண்டிருக்கின்ற மக்களிடம் நேரடியாக உரையாற்றுவோம். காணொலி வழியான கூட்டம் என்பதால், சென்னையிலிருந்தே நானும் திமுக முன்னோடிகளும் உரையாற்ற, ஈரோடு மாவட்டச் செயலாளர்கள் இருவரும் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஒன்றியம் – நகரம் – பேரூர் எனப் பல இடங்களிலும் ஏற்பாடு செய்திருந்த காணொலி அரங்குகள் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான – ஆயிரத்தைக் கடந்த அளவில் திமுகவினரும் பொதுமக்களும் திரண்டிருந்ததை என்னால் காண முடிந்தது.
நகரம் முதல் சிற்றூர் வரை உள்ள தொண்டர்கள் அவரவர் ஊர்களில் உள்ள அரங்குகளில் இருந்தே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, உரைகளைக் கேட்கும் வாய்ப்பை காணொலித் தொழில்நுட்பம் வழங்கியது. பூகோள ரீதியாக இடங்கள் வெவ்வேறாயினும், லட்சிய ரீதியாக இதயம் ஒன்றே என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.
ஈரோடு போலவே, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்கள் இருவரும் சீரிய முறையிலே ஏற்பாடு செய்திருந்த ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தில், கருணாநிதியின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெரும்பேற்றினைப் பெற்றேன். அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட தலைவர் கருணாநிதியின் முதல் சிலை போலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரத்திலும் உன்னதமான முறையிலே சிலைகள் அமைக்கப்பட்டுத் திறக்கப்படுவதைக் காண்கையில், ஒவ்வொரு தொண்டரின் உள்ளத்திலும் அவர் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து உவகை கொள்ள முடிகிறது.
விருதுநகர் மாவட்ட திமுகவின் சார்பிலும் நவீன மருதிருவராம், மாவட்ட செயலாளர்கள் இருவரும் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் மகத்தான வெற்றியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது. ‘தமிழகம் மீட்போம்’ என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டிய மாவட்டமாக விருதுநகர் இருப்பதை என்னுடைய உரையில் சுட்டிக்காட்டினேன். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் இந்தப் பொதுக்கூட்டத்திலே மிகச் சிறப்பான முறையிலே கருத்துகளை எடுத்து வைத்ததுடன், நிகழ்வு நிறைவடைந்தபிறகு, என்னுடைய உரையில் இருந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பாராட்டியதை பெரும் ஊக்க அமுதமாகக் கருதுகிறேன்.
அதுபோலவே, திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், நகைச்சுவை தேன் தடவி கருத்து விருந்து வழங்குபவருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் உரையும் சிறப்பான முறையிலே அமைந்து, எல்லாரையும் கவர்ந்தது.
என்னுடைய உரையில், பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் செய்யும் ஊழல்கள் பொங்கிப் பெருகி வழிந்தோடுவதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினேன். பதில் சொல்ல முடியாத நிலையில், நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமின்றி, என் மீது தனிப்பட்ட காழ்ப்பினை அள்ளிக் கொட்டியிருக்கிறார் அந்த அமைச்சர்.
நெருப்பையே அள்ளிக் கொட்டினாலும் ஏந்திக் கொள்ளும் இதயமிது. ஊழல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அவர் நினைக்கலாம். ஊழலின் நாடியைச் சரியாகப் பிடித்திருக்கிறோம். திமுக ஆட்சி அமையும்போது அதற்கான சிகிச்சைகள் தேடித் தேடித் திரட்டிக் கிடைத்திடும்.
அந்த அமைச்சர் ஒருவர் மட்டுமல்ல, அமைச்சரவை மொத்தமும் அப்படித்தான் என்பது தமிழ் அகிலத்துக்கும் தெரியும். அதனை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், வழக்கும் தொடுத்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறது திமுக.
அதனை எதிர்கொள்ள இயலாமல் வாய்தா வாங்கியும், உச்ச நீதிமன்றம் வரை சென்று விசாரணைக்குத் தடைகள் பெறுவதிலும்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகிறார்கள். திமுக எடுக்கும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் கோபமும் ஆற்றாமையும், என்னையும் திமுகவையும் கொச்சைப்படுத்தி, அவதூறான, தரம்தாழ்ந்த போஸ்டர்களை இருண்ட நேரத்தில் ஒட்ட வைக்கிறது.
குனிந்து – தவழ்ந்து முதுகெலும்பை முற்றும் இழந்தவர்களுக்குத் துணிச்சல் எங்கே இருக்கும்? அதனால்தான் அச்சிட்டது யார் என்பதைக்கூடப் போடாமல், சட்டத்திற்குப் புறம்பான முறையிலே திருட்டுத்தனமாகப் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் இருட்டைக் கிழித்தெறியும் உதயசூரியன். அப்போது இந்தத் திருட்டுத்தனங்களின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம். அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுமையாக மீட்கப்படும்.
நான்காவது பொதுக்கூட்டம் காணொலி வாயிலாகத் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது. முந்தைய கூட்டங்களைப் போலவே இங்கும் நகரம் – ஒன்றியம் – பேரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள அரங்குகளில் மக்கள் திரண்டிருந்தனர். தொலைக்காட்சி நேரலையிலும் பலர் பார்த்தனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே, அதுபோல தமிழ்நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதற்கு, தூத்துக்குடி மாவட்டம் ஒன்றே சரியான எடுத்துக்காட்டாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை, காக்கை – குருவிகளை சுட்டுத்தள்ளுவதைவிடவும் மோசமாகச் சுட்டுக்கொன்று, இந்த அரசு யாருடைய உத்தரவின் கீழ் இயங்குகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டிய கொடூர நிகழ்வை இன்றளவிலும் மறக்க முடியுமா?
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகனான, ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட சிறையில் அடைக்கப்பட்டு, உயிர் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வைத்தான் தமிழகம் மறந்திடுமா?
அந்தக் கொலைகளை மறைத்திட ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக அவிழ்த்துப் போட்ட பொய்கள்தான் மக்கள் மனங்களிலிருந்து மறைந்து போகுமா?
அவற்றையெல்லாம் எடுத்துரைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான கனிமொழி உரையாற்றும்போது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சிக்குரிய வகையிலே செயலாற்றுகிறது என்பதை எடுத்துரைத்தார். உண்மைதான்; நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழக மக்களின் மனங்களை ஆள்வது திமுக தான். அதனால்தான், மக்களின் குரலாக, மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எப்போதும் ஒலிக்கிறோம்.
இந்தக் கரோனா பேரிடர் தாக்கத் தொடங்கியபோதே பாதுகாப்பு நடவடிக்கைகளை முதன்முதலாக வலியுறுத்தியது திமுக. அதனை அலட்சியப்படுத்தி சட்டப்பேரவையில் கிண்டல் – கேலி செய்த ஆட்சியாளர்கள்தான், தங்கள் முகத்தை மறைக்கும் மாஸ்க்குடன் வலம் வருகிறார்கள்.
கரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிடவேண்டும் என திமுக வலியுறுத்தியபோது, தேர்வு நடத்தாமல் எப்படி மதிப்பெண் வழங்குவது எனக் கேட்ட அறிவார்ந்த ஆட்சியாளர்கள்தான், உயர் நீதிமன்றம் குட்டு வைத்ததும் ‘ஆல்பாஸ்’ என அறிவித்தார்கள். அரியர்ஸ் மாணவர்களைக்கூட அரசியல் கணக்குடன் பாஸ் போட வைப்பதும், தேர்வு நடத்தாமல் எப்படி மதிப்பெண் வழங்குவது எனக் கேட்டதும் இதே வாய்தான்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்து குரல் கொடுத்து, அதற்கான தீர்மானங்களுக்கு ஆதரவும் அளித்த நிலையில், தனது அலட்சியத்தால் நீட் தேர்வு தமிழகத்தில் நுழையக் கதவுகளை அகலத் திறந்தது எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசு. அதனால் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் தற்கொலை பெருகியது.
பழியைத் துடைப்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு என அமைச்சரவை முடிவும், சட்டப்பேரவைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டும், ஆளுநரின் ஒப்புதலுக்காக அது கிடப்பிலேயே கிடந்த நிலையில், அதுகுறித்தும் அக்கறையற்ற அரசாகவே எடப்பாடி பழனிசாமியின் அரசு இருந்தது.
இந்த ஆண்டே அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், மாபெரும் போராட்டம் நடத்தியது திமுக. அதன்பிறகே, எடப்பாடி பழனிசாமி அரசு அதனை நடைமுறைப்படுத்த முன்வந்தது. ஆளுநரின் ஒப்புதலும் கிடைத்தது.
பேரிடரின் இரண்டாம் அலை வீசும் அபாயம் உள்ளது என அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி – கல்லூரிகளைத் திறப்பதாக அறிவித்தது அதிமுக அரசு. அதன் அபாயம் குறித்து திமுக விரிவாக எடுத்துரைத்து, பள்ளி – கல்லூரிகள் திறப்பைத் தள்ளி வைக்க வலியுறுத்தியது.
அதைச் செய்தால், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லது என்பதைவிட, மு.க.ஸ்டாலின் சொல்லிச் செய்ததாக ஆகிவிடுமே என்ற காழ்ப்புணர்வினால், கருத்துக் கேட்பு நிகழ்வு என மாற்றி அறிவித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு என்பதைக்கூடவா தமிழக மக்கள் அறியமாட்டார்கள்?
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக அப்பாவிகள் பலியாவது குறித்தும், அதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டேன். அடுத்த நாள், முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதிக்கும் என்கிறார்.
இப்படி மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஒவ்வொன்றையும் எதிர்க்கட்சியான திமுக தான் முன்னெடுக்கிறது. அதன்பிறகே, ஆட்சியில் உள்ளவர்களுக்கு உறைக்கிறது; புத்தி தெளிகிறது. கரோனாவின் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோதே பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து குடும்ப அட்டைக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது திமுக.
ஆனால், அதனை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு, தீபாவளிப் பண்டிகையின் காரணமாகவும், தேர்தல் நெருங்குவதாலும், குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் தரவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதுவும் இல்லை என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
திமுக சொன்னதை நிறைவேற்றும் வழக்கம் கொண்ட அதிமுகவின் முதல்வர், இதையும் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்.
மாநிலத்தின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்து, நிர்வாகத்தைச் சீரழித்து, தொழில்வாய்ப்புகள் இல்லாத நிலையை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, மாநில அரசுக்குள்ள உரிமைகளை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்ட அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கப் போவதில்லை.
ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். அந்த ஒளி, உதயசூரியனால் கிடைக்கும். ஜனநாயக வழியில் தமிழகத்தை மீட்போம்!
தலைவர் கருணாநிதியின் தொண்டர்களே, நான்கு மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்கள் போல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் அலை அலையான பங்கேற்புடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடக்கட்டும்! தமிழ் மக்களின் பேராதரவுடன், தரணி போற்றத் தமிழகம் மீளட்டும்!”.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.