அபுதாபியில் சுஷ்மா பேச்சைப் புறக்கணித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உரையை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புறக்கணித்தார்.

அபுதாபியில், இஸ்லாமிய கூட்டுறவுக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவுரவ அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றிய போது, அரங்கில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை காலியாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பது எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. இஸ்லாம் என்றால் அமைதி எனப் பொருள்படுகிறது. அல்லாவின் 99 திருப்பெயர்களில் ஒன்றுகூட வன்முறையை குறிக்கும் வகையில் இல்லை. மனிதகுலத்தை நாம் காப்பாற்ற விரும்பினால், தீவிரவாத கட்டமைப்புகளை அழிக்க வேண்டும். பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்துமாறு, தீவிரவாதிகளுக்கு ஆதரவும் புகலிடமும் அளிக்கும் நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். இந்தியா பழமையான கலாச்சாரங்களையும், ஒருமைப்பாட்டையும் கொண்ட நாடு. பல்வேறு பிராந்திய மொழிகளைப் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் இந்திய குடிமக்களாக அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு சுஷ்மா அந்தக் கூட்டத்தில் பேசினார்.